2026 மே 09, சனிக்கிழமை

dd

'த.தே.கூவின் போராட்டங்களையே அரசு விரும்புகிறது'

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் இன்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நோகாமல், வலிக்காமல் செய்யும் போராட்டங்களையே விரும்புகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட, ஒரு ஜனநாயக கட்டமைப்புகள் கொண்ட சட்ட பூர்வமான ஒரு அமைப்பாக மாறவேண்டும் என்றே தமிழ் புத்திஜீவிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கோரி வருகின்றனர்' என்று வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் பலவற்றை இலங்கை அரசாங்கம் புடுங்கிவிட்டது. மாகாணசபைக்குரிய சகல அதிகாரங்களையும் அகற்றிவிட்டே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்துவதற்காக இன்று இந்தியாவின் அரசியல் தலைவர்களை சந்திக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இந்த மாகாணசபையை அன்று தோழர் பத்மநாபா பொறுப்பேற்கும்போது மாகாணசபை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு அல்ல. இடைக்கால அரசாங்கமான இதில் இருந்துதான் நாங்கள் மேலே போகவேண்டியுள்ளது என ஒரு தீர்க்கதரிசனமாக தெரிவித்தார்.

இலங்கை-இந்திய உடன்படிக்கையினை ஏற்றுக்கொண்டதன் காரணமாக நாங்கள் இரண்டாயிரத்துக்கும் அதிகமான எமது உறுப்பினர்களை இழந்துள்ளோம். எங்களுக்கு காலத்துக்குகக் காலம் கிடைத்த சந்தர்ப்பங்களை நாங்கள் தவறவிட்டுள்ளோம்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருகட்டமைப்பைக் கொண்டுள்ளதா எனக்கேட்டால் அது இல்லையென்றே  சொல்லமுடியும்.

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் அங்குள்ள சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒரு பெரும் ஜனநாயக அமைப்பாக மாறவேண்டிய தேவையிருக்கின்றது. அதன் மூலமே இலங்கை அரசாங்கத்துக்கு பெரியளவிலான அழுத்தங்களைக் கொடுக்கமுடியும்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் இன்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நோகாமல் வலிக்காமல் செய்யும் போராட்டங்களையே விரும்புகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட, ஒரு ஜனநாயக கட்டமைப்புகள் கொண்ட சட்ட பூர்வமான ஒரு அமைப்பாக மாற்றவேண்டும் என்றே தமிழ் புத்திஜீவிகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் கோரி வருகின்றனர். ஆனால் அந்த நிலைமை ஏற்படாமல் உள்ளது.

மிதவாத தலைமைகளைக் கொண்டுள்ள தலைவர்கள் அதனைக் கொண்டுவருவதற்கு பயப்படுகின்றார்கள். இவ்வளவு இழப்புகளையும் சந்தித்த பிறகும் 'நான் பெரிது எனது கட்சி பெரிது' என்ற நிலையிலேயே உள்ளனர்.

நாங்கள் ஒன்றுபட்டு எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு தீர்வை காணவேண்டும். இன்று தாய்மார்கள் கண்ணீர்விட்டு வருகின்றனர். இதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதில் இருந்து யாரும் விலகிச்செல்லமுடியாது.

ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை சொல்லிவிட்டு செல்லமுடியாது. பல இழப்புகளை சந்தித்த சமூகம் என்ற அடிப்படையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இதில் இந்திய அரசாங்கத்துக்கு பொறுப்பு இருக்கின்றது. கடமை இருக்கின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டவர்கள் என்ற ரீதியில் அந்த கடமையுள்ளது. இலங்கை அரசாங்கம் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு பக்கத்தில் ஆயிரக்கணக்கான காணிகள் பறிபோகின்றன. மாகாணசபை அதிகாரங்களை கைப்பற்றுதல் என பல நடவடிக்கைகளை மூர்க்கத்தனமாக மேற்;கொள்ளப்படுகின்றன. இந்த போக்கானது தனது தலையில் தானே மண்ணை அள்ளிப்போடும் செயற்பாட்டையே இந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ளது.

இனவாதிகளை தூண்டிவிட்டு தமிழர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் தன்னுடைய தலையில் தானே மண்ணை போடும் நடவடிக்கையாகவே உள்ளது.

மிகவிரையில் அமெரிக்காவாக இருக்கலாம். இந்தியாவாக இருக்கலாம் ஒரு சர்வதேச நாட்டின் அழுத்தத்தோடு எங்களுக்கான ஒரு தீர்வைப்பெற்றுக்கொள்ளும் காலம் நெருங்கிகொண்டு வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் ஒரு பலமான சக்தியாக இருக்கவேண்டியுள்ளது. ஒற்றுமையாக இருக்கவேண்டியுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .