2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் சமூகச்சீரழிவு அதிகரிப்பு: சார்ள்ஸ்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகச் சீரழிவு அதிகரித்துக் காணப்படுவதாக அம்மாவட்டத்தின்  அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை தேசிய உணவுக் கலாசார மேம்பாட்டுத் திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகச் சீரழிவுகள் அதிகரித்துச் செல்வதை மாதாந்தம் எமக்கு கிடைக்கும் அறிக்கைகளிலிருந்து அறியமுடிகின்றது. மதுபாவனை, போதைவஸ்துப் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், பாடசாலை மாணவர்கள் மீதான துஷ்பிரயோகம், பெண்கள் மீதான வன்முறைகள், வீட்டு வன்முறைகள், குடும்ப வன்முறைகள், உள்ளிட்ட சமூகச் சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் அறிக்கைகளிலிருந்து அறியமுடிகின்றது. இது எமக்கு வேதனையளிக்கின்றது.

இவற்றினை இல்லாமல்ச் செய்வதற்கு சமூக ஒழுக்க கலாசார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

'மஹிந்த சிந்தனை' ஊடாக வரவு - செலவுத் திட்டத்தில் கூறப்பட்டவாறு மரபுரிமைக் கலாசார மேம்பாட்டினூடாக ஆசியாவின் அறிவுமிக்க நாடாக இலங்கையை மாற்ற இவ்வாறான பாரம்பரிய உணவுக் கலசார  மேம்பாட்டு வேலைத்திட்டமும் அவசியமாகும். இவ்வாறான பாரம்பரிய உணவுகள் உள்நாட்டில் கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் பாரம்பரிய உணவுகள் கவனத்திற்கொள்ளப்படுகின்றன.

இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்ற உணவுக் கலாசார மேம்பாட்டுத்திட்ட நிகழ்வுகளை பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் கிராமங்கள் தோறும் நடத்தி ஊக்குவிப்பதற்கு  பிரதேச செயலாளர்களும் கலாசார உத்தியோகத்தர்களும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வேகமான உணவு முறை (பாஸ்ட் பூட்) பல்வேறு நோய்த் தாக்கங்களை உடம்புக்கு ஏற்படுத்துகின்றதென்று தற்போது கூறப்படுகின்ற நிலையில், இவ்வாறான பாரம்பரிய உணவுக் கலாசாரம் எமக்கு சிறந்த ஆரோக்கியத்தையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .