-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனையில் மஞ்சள் கடவையில் சென்று கொண்டிருந்த சிறுமி மீது வான் மோதியதில் அந்தச் சிறுமி பாரதூரமான காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறக்கொட்டான்சேனை ராமகிருஷ்ண மிஷன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மேகநாதன் அபிலக்ஷி (வயது 7) என்ற சிறுமியே மேற்படி விபத்தில் சிக்கியவராகும்.
இந்தச் சிறுமி பாடசாலைக்கு அருகிலுள்ள மஞ்சள் கடவையைக் கடக்கும்போது வீதியால் வேகமாக வந்து கொண்டிருந்த வான் சிறுமிமீது மோதியுள்ளது. வான் சாரதி உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ற் எம்.செல்வகுமார் தெரிவித்தார்.
மோதுண்ட சிறுமி உடனடியாக சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வானே சிறுமி மீது மோதியுள்ளது. வான் சாரதியான இஸ்மாயில் முஹம்மது சாஜஹான் என்பவர் நேற்றைய தினமே ஏறாவூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எல். முனாஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது சாரதியை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.