2026 மே 09, சனிக்கிழமை

dd

'ஏனைய பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகம் மற்றும் சிறுபோகம் நெற்செய்கை தவிர  ஏனைய காலங்களில் சேனைப்பயிர்ச் செய்கை, தானியப்பயிர்ச் செய்கை, பழப்பயிர்ச் செய்கை ஆகியவற்றையும்; மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சம்மேளனங்களின் குறைநிறைகள் தொடர்பில் அவர்களுடன் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த வாரத்திலிருந்து  கலந்துரையாடி வருகின்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தும் வேலைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். அந்த வகையில், பழப்பயிர் மற்றும் தானியப்பயிர்ச் செய்கைகளை அதிகரிக்கும்போது மாவட்டத்தின் போஷாக்கு தொடர்பான பிரச்சினைகள் குறைக்கப்படும். அத்துடன், சேனைப்பயிர்ச் செய்கையும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து அவற்றின் சம்மேளனங்களுடன் கலந்துரையாடி வருகின்றேன். அவற்றில் இருந்து விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகள், நீர்ப்பாசனப் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளினுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டங்கள் இதுவரையில் கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய பிரதேசங்களில் உள்ள விவசாயிகளினுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடி வருகின்றேன்.

விவசாயிகள் பல வகைகளிலும் அழிவுகளைச் சந்திக்கின்றனர்.  இவை தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு மிக விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவண செய்யவுள்ளேன்.

மேலும், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகப்; பிரிவில் உள்ள பிரதேச குளங்கள், விவசாய வீதிகள் அமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .