2025 மே 03, சனிக்கிழமை

'அத்துமீறி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரை வெளியேற்றும் பணிகள் துரிதம்'

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி சட்டவிரோதமாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் அனைத்து குடும்பங்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மேய்ச்சல் நிலங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் சட்டவிரோதமாக சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளதனால் உள்ளுர் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று சந்தித்து அவர்களது குறைநிறைகள் பற்றிக் கேட்டறிந்தார்.

இந்த விஷேட சந்திப்பு சித்தாண்டி பால் சேகரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது பண்ணையாளர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரைகள் சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறித்து எடுத்துக் கூறினர்.

குறிப்பாக மீயான்கல் குளம் பிரதேசத்தில் கடந்த இரண்டு வருட காலத்திற்குள் முந்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சட்டவிரோத பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாதுறுஓயா ஆற்றுக்கு அண்மித்த இப்பகுதியில் காணி ஆணையாளர், கிரான் பிரதேச செயலாளர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக சேனைப் பயிர் செய்யப்படுவதனால் பெரும் போக நெல் வேளாண்மையின் போது கால்நடைகளை பராமரிப்பதற்கான மேய்ச்சல் நிலம் இல்லாமல் போய்விட்டது.

அத்துடன் வழக்கம் போல கால்நடைகள் குறித்த பிரதேசங்களுக்கு செல்லும் பட்சத்தில் சட்டவிரோத பயிர்ச் செய்கையாளர்களினால் தாக்கப்படுவதாக பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

நவம்பர் 5 ஆந்திகதி பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் கால்நடைகள் உரிய மேய்ச்சல் தரைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில்லாது தடுமாறுகின்றனர்.

மேய்ச்சல் தரை மீயான்கல் குளம் பிரதேசத்தில் அளக்கப்பட்டு அடையாளப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதற்கென கிழக்கு மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளும் விஷேட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது இதனையடுத்து நடவடிக்கைள் துரிதப்படுத்தப்படுமென பிரதியமைச்சர் முரளிதரன் பண்ணையாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இதுபோன்று பிரச்சினைகளுக்கு அரசாங்க சார்புள்ள பிரதிநிதிகளினால் மாத்திரம்தான் தீர்வுகாண முடியும் பாராளுமன்றத்திற்கோ மாகாண சபை உறுப்பினர்களுக்கோ அனுப்புவதன் மூலம் எவ்வித தீர்வுகளையும் எட்ட முடியாது என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X