2025 மே 02, வெள்ளிக்கிழமை

தமிழ் பிரதிநிதிக்காக சுவாமி நாதன் எம்.பி குரல் கொடுக்கவில்லை: அரசரட்ணம் சசிதரன்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையில் தமிழ் பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் குரல் கொடுத்ததாக கூறுவது அப்பட்டமான பொய்யாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான அரசரட்ணம் சசிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டத்தின் போது தமிழ் பிரதி நிதியொருவரை நியமிக்குமாறு தான் கோரியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானதாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையை நியமிப்பதற்கான கட்சியின் செயற்குழுக் கூட்டம் கடந்த 7 ஆம் திகதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் நானும் கலந்து கொண்டேன்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது தமிழ் பேசும் சமூகமான முஸ்லிம் சமூகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழ் பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு அக்கூட்டத்திலிருந்து நான் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அதற்கு சரியான பதில் கட்சி தலைவரிடமிருந்து கிடைக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக எனக்கு முதல் ஏற்கனவே கட்சி முக்கியஸ்த்தர்கள் மட்டத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் சி.வை.பி ராம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நானும் உறுப்பினர் ராமும் இதற்காக குரல் கொடுத்தோமே தவிர நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் எவ்வாறான கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

சுவாமிநாதன் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்பதனால் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு நியமிப்பதற்கு அவர் தகுதியற்றவராவார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ.; மாவட்ட நாடாளுமன்ற ளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், மற்றும் மாகாண சபை உறப்பினர் ராம், உட்பட நான் ஆகிய மூவருமே இதற்கு தகுதியானவர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஐக்கிய தேசியக் கட்சியில் தமிழ் சமூகத்தின் பிரதிநிதியென கூற முடியாது. அவர் கட்சியில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்காகவோ அல்லது கட்சியின் வளர்ச்சிக்காகவோ உழைக்கவில்லை.

கடந்த வட மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அவரை வட மாகாண தேர்தல் நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டிருந்ததுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களையும் அவரே நியமித்தார்.

ஆனால் அங்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒரு வீதமான வாக்கையேனும் பெறவில்லை. இதன் மூலம் யாழ் மக்களினால் அவர் நிராகரிக்கப்பட்டார். அதே போன்றுதான் அவரை கிழக்கு மாகாண மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் இவர் இப்படியான பொய்யை கூறுவது தமிழ் சமூகத்தை ஏமாற்ற முனைகின்றார் என்பதையே காட்டுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு தமிழ் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படமையானது தமிழ் சமூகத்தை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்துள்ளதை காட்டுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டதை வைத்து தமிழ் பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார் என கூறமுடியாது.
தமிழ் சமூகம் இந்த நாட்டில் முதலாவது சிறுபான்மை சமூகமாகும். அதற்கு அடுத்ததுதான் முஸ்லிம் சமூகமாகும்.

ஜனாதிபதி தேர்தல்கள் அனைத்திலும் .இந்த நாட்டு தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரையே ஆதரித்து வந்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆனால் இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைக்கு தமிழ் பிரதிநிதியொருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் வேதனையைத்தருகின்றது.

இது தொடர்பில் நான் குரல் கொடுத்தும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழு மற்றும் ஏனைய கூட்டங்களுக்கு அழைப்புக்களை அனுப்பும் போது தமிழிலும் அனுப்பப்பட வேண்டுமென பல தடவைகள் கோரிக்கை விட்டிருந்தேன் ஆனால் அது சிங்களத்தில் மாத்திரம்தான் அனுப்பப்படுகின்றது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .