2025 ஜூலை 30, புதன்கிழமை

'வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுவது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது'

Kogilavani   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
, எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.முர்ஷிட்

'நாடு பூராகவும் வறுமை குறைவடைந்துள்ள நிலையில் நமது மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில்  உச்ச நிலைக்குச் சென்றிருப்பது தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது' என்று பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

சமூகநலப் பணிகளுக்கு உபகரணங்களும் தளவாடங்களும் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை மாலை (23) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக 50 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ள நிலையில் வறுமை தாண்டவமாடும் ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு முதலிடத்திற்கு வந்துள்ளது.

வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், சிறுவர் பூங்காக்கள் என்று பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

ஆனால் வீடுகளிலே வாழ்கின்ற மக்கள் வறுமையோடு காலங்கழிக்கின்றார்கள். வறுமையை நாங்கள் போக்காத வரையிலே எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.

எமது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழே நேரடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 1400 பேரளவில் உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கமநல சேவை அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் இதைப்போல இன்னும் எமது அமைச்சின் கீழ் வரும் எல்லா உத்தியோகத்தர்களையும் அதிகாரிகளையும் அழைப்பித்து எமது அமைச்சைச் சேர்ந்த துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு கலந்துரையாடி பயிற்சியளித்திருக்கின்றோம். அதன் மூலம் இவர்களைக் கொண்டு அபிவிருத்தி மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

யுத்தம் இடம்பெற்றபோது எமது மாவட்டத்தின் வறுமை நிலைமை 12 சதவீதமாகத்தான் இருந்தது. யுத்தம் நிறைவடைந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டபோதும் எமது வறுமை நிலைமை 20 சதவீதத்தை எட்டிப்பிடித்திருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக 50 ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன.

2014 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியாகச் சென்று தீர்மானங்களை எடுத்து அந்தத் திர்மானங்கள் உரிய காலத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீவிரமாகச் செயற்படத் தீர்மானித்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, கிரான் ஆகிய பிரதேச செயலகங்களும் மற்றும்  ஊத்துச்சேனை கிரமசேவகர் பிரிவும் மிகவும் வறுமையான இடங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.  

இதேவேளை, அரசடிக் கிராமசேவையாளர் பிரிவு  வசதியான  அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே பொறுப்புக் கூறவேண்டிய நாம் எல்லோருமாகச் சேர்ந்து மனிதாபிமான அடிப்படையில் வறுமையை ஒழிப்பதற்குப் இரவு பகலாகப் பாடுபட வேண்டும். வெறுமனே காலை ஒன்பது மணிக்கு வந்து மாலை 4 மணிக்குப் போகின்ற உத்தியோகத்தர்களாக இல்லாமல் இந்த மாவட்டத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்பதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும்.

தாண்டவமாடும் இந்த வறுமையை ஒழிப்பதற்காக கிராமம் கிராமமாகச் சென்று துறைரீதியாக அடையாளம் கண்டு அதற்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து செயற்படத் தீர்மானித்துள்ளோம்.

2014 ஜனவரியிலிருந்து சமூர்த்தி உத்தியோகத்தர்கள் திவிநெகும திணைக்களத்தோடு இணைக்கப்படுவார்கள்.' என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .