2025 ஜூலை 30, புதன்கிழமை

ஆணையாளர் விவகாரம்: கூட்டமைப்பின் ஆட்சேபத்திற்கு அதிருப்தி

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதனை ஆட்சேபித்தும் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் இணைந்து ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

குறித்த நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் எதிர்ப்பதற்கான காரணம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் என்பதேயாகும். இனரீதியான காரணம் தவிர்ந்த வேறு எந்தவொரு நியாயமான காரணத்திற்காகவும் இந்த நியமனத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கவில்லை என்பது அக் கடிதத்தின் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

நாட்டில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இனங்களுக்கிடையே சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டிய அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இவ்வாறு இனவாத நோக்கில் சிந்திப்பதும் செயற்படுவதும் நாட்டை மீண்டும் குட்டிச்சுவராக்கவே வழிவகுக்கும் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது.

உயர் பதவிகளில் தமது இனம் அல்லாத வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிடக் கூடாது எனச் சிந்திக்கின்ற இனவாத மனப்பாங்கு கடந்த காலங்களில் இந்த நாட்டு மக்கள் மத்தியிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மத்தியிலும் குடியிருந்ததன் காரணமாக நாம் சந்தித்த மோசமான விளைவுகளை நாம் எல்லோரும் அறிவோம்.

மனித நேயத்தின் அடிப்படையிலான இணக்கப்பாட்டு அரசியல் முன்னெடுப்புகள் ஊடாக நாட்டில் நல்லிணக்கத்தைத் தோற்றுவிக்க முடியும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புரிந்துணர்வு அரசியலை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இவ்வாறான இனவாதக் கருத்துக்களும் சிந்தனைகளும் அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுகின்றன என்பது துரதிஷ்டமாகும்.

உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படும் எவரும் எந்த இனத்தைச் சார்ந்தவர் என்பதை நோக்குவதை விடுத்து அவர் அப்பதவியை வகிப்பதற்கான தகுதியையும் தராதரத்தையும் அனைத்து விவகாரங்களையும் நீதி வழுவாது கையாளுகின்ற பக்குவத்தினையும் மனோநிலையையும் கொண்டிருக்கின்றாரா எனச் சிந்திக்க வேண்டும் என்பதே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை தமிழர் ஒருவரே உயர் பதவிக்கு வர வேண்டும் என தமிழ் மக்களும் முஸ்லிம் ஒருவரே உயர் பதவிக்கு வர வேண்டும் என முஸ்லிம் மக்களும் சிந்திப்பது ஆரோக்கியமற்றதாகும்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக முஸ்லிம் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலவாகவே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனவும் முன்வைக்கப்பட்ட அரசியல் கோஷங்களை நாம் அறிவோம். முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு இன்று ஒன்றரை வருடம் பூர்த்தியாகியிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றிற்கு இதன்மூலம் தீர்வு கிட்டியிருக்கிறதா? என்றால் அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை.

அதுபோலவே இதுவரை உள்ளூராட்சி ஆணையாளராக தமிழர் ஒருவர் பதவி வகித்ததன்மூலம் ஏதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடிந்திருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. இவ்வாறு உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் கை பொம்மைகளாகவும் அல்லது அரசியல்வாதிகளின் கை பொம்மைகளாகவும் செயற்படுவதும் தமது கடமைகளை நீதியாக நிறைவேற்றக்கூடிய சுதந்திரமும்இ திராணியும் உள்ளவர்களாகவும் இவர்கள் இல்லை என்பதுவுமே இந்நிலமைகளுக்கான அடிப்படைக் காரணமாகும்.

எந்தவொரு பதவியிலும் நியமிக்கப்படுகின்ற ஒருவர் அரசின் கைப்பொம்மையாகவோ அல்லது அநீதியாக நடப்பவராகவோ இருக்கக் கூடாது என்பதில் நாம் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டுமே தவிர இன்னுமொரு இனத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது எனச் சிந்திப்பது மடமைத்தனமாகும்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் புதிய உள்ளுராட்சி ஆணையாளர் எந்தவித தலையீடுகளுமின்றி சுதந்திரமாகவும் நீதியாகவும் தனது கடமைகளைச் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதே நம்முன்னுள்ள கடப்பாடாகும். அதைவிடுத்து இவ்விடயத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் நோக்குவதும் அதனடிப்படையில் நியமனத்தை மாற்றியமைக்குமாறு கோருவதும் எந்தவொரு சமூகத்துக்கும் நன்மை பயக்கப் போவதில்லை. மாத்திரமன்றி அது நமது சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க  முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமையும்.

எனவேதான் இந்த விடயம் தொடர்பில் இனவாதத்தை பிரதிபலிக்கும் வகையில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கின்றது. சமூகங்களுக்கு மத்தியில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை எமது இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இவ்வாறான அணுகுமுறைகளை சகலரும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

அதேபோன்று இவ்வாறான செயற்பாடுகள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான நல்லிணக்க அரசியலுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

இது தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியற் கூட்டமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதுடன் விரைவில் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடவும் எதிர்பார்த்திருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .