2025 மே 03, சனிக்கிழமை

புணானை பெரும்பான்மையின குடியேற்றத்துக்கு எதிராக நடிவடிக்கை எடுக்கவும்: பொன். செல்வராசா

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட புணானை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய பெரும்பான்மையின குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, வன பரிபாலன திணைக்கள தலைமை அதிகாரியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை கிழக்கு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சர், மீள்குடியேற்ற பிரதியமைச்சர், மாவட்ட அரசாங்க அதிபர் சகிதம் ஏற்கனவே அங்கிருந்து யுத்தத்தினால் வெளியேறி இடம்பெயர்ந்திருந்தவர்களை மீள்குடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது அப்பகுதியில் 68 தமிழ் குடும்பங்களும் 27 சிங்கள குடும்பங்களும் இரண்டு முஸ்லிம் குடும்பங்களும் மீளக்குடியமர்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் காணிகளை பகிர்ந்தளிக்குமாறு பிரதேச செயலாளருக்கும் பணிக்கப்பட்டுள்ளது. இவை சட்ட ரீதியாக நடைபெறும் நிகழ்வாகும்.

ஆனால் இதற்கு முன்பாகவே அப்பகுதியில் 15 சிங்கள குடும்பங்கள் அப்பகுதியில் உள்ள பௌத்த பிக்கு ஒருவரின் உதவியுடனும் இராணுவத்தின் உதவியுடனும் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ளனர்.

அக்காணிகள் வனபரிபாலன இலாகாவுக்கு சொந்தமானது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன அதிகாரியினால் 10 குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையும் மீறி இன்னும் 23 குடும்பங்களை இதே பௌத்த பிக்குவும் இராணுவத்தினரும் இணைந்து அதே இடத்தில் அத்துமீறி குடியேற்றியுள்ளனர்.

கடந்த 08ஆம் திகதி குறித்த பகுதிக்கு நான் நேரடியாகச்சென்று அத்துமீறிய குடியேற்றத்தைப் பார்வையிட்டேன். இதன்போது அத்துமீறிய குடியேற்றங்கள் தொடர்பில் அப்பகுதி மக்களும் எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பில் வனபரிபாலன திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரியிடமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அத்துமீறி குடியேறுவது என்பது சட்டத்திட்டங்களுக்கு முரணான செயற்பாடாகும். அதேநேரத்தில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதையும் மீறி அத்துமீறி குடியேற்றுவது என்பது அனைத்திலும் மேலான தவறாகும்.

இந்த 38 குடும்பங்களில் 10 குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 23 குடும்பங்களுக்கும் எதிராக இதுவரையில் எதுவிது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் கிராண் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வடமுனை கிராமத்தில் கூட பிற மாவட்டங்களை சேர்ந்த 05 சிங்கள குடும்பங்கள் அப்பகுதி பௌத்த பிக்கு ஒருவரால் குடியேற்றப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறான நிலைமைகள் தொடருமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காடுகள் அழிந்துவிடும் அபாயம் ஏற்படும். இந்த நிலைமையினை தடுக்க நடவடிக்கஇயெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள், மீள்குடியேற்ற அமைச்சர், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X