2025 மே 03, சனிக்கிழமை

மக்களின் தேவை அறிந்து வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் செயலாற்றவில்லை: கமலதாஸ்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  மக்களின் தேவைகளை அறிந்து வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் செயலாற்றவில்லையென மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் இணையத்; தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

கல்லடியிலுள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற  ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் குறிப்பாக ஐக்கிய அமெரிக்க உதவித்திட்டம் எனப்படும் யு.எஸ்.ஐட் உள்ளிட்ட  நிறுவனங்கள்; மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவைகளையுடைய மக்களை அடையாளப்படுத்தி உதவாமல் தேவைகள் அற்ற மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது. இதற்கு உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களும் காரணமாக உள்ளன.

சில வெளிநாட்டு அரசசார்பற்ற  நிறுவனங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களூடாக மக்களுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளாமல், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியேயுள்ள நிறுவனங்களூடாகச் செயற்றிட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதனால், உதவிகள் தேவைப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை.  அவ்வாறே மாவட்டத்திற்கு வெளியேயுள்ள நிறுவனங்கள் இம்மாவட்டத்துக்காக வந்த கணினிகள் மற்றும் தளபாடங்களையும் தூக்கிச்சென்றமையும் இடம்பெற்றுள்ளன.

இந்த உதவிகளானது அதிகாரத்தையும் அரசியலையும் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், உதவிகள் தேவைப்பட்ட மக்களை சரியாக அடையாளப்படுத்தாமல்  உதவிகள் தேவைப்படாத  மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களிடமிருந்து திட்டங்களுக்கான முன்மொழிவுகள் பெறப்படாமல்  மேற்கொள்ளப்பட்டு அவர்களிடம்; சில திட்டங்கள் திணிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்த நிறுவனங்களிடம் மக்கள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புக்கள் சுதந்திரம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லையென கூறமுடியும். தேவையில்லாதவர்களுக்கும் வசதியுள்ளவர்களுக்குமே உதவிகள் கிடைக்கின்றன.

கடந்த யுத்தத்தால் வன்னியிலிருந்து  இடம்பெயர்ந்து ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் இன்னும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் சில வெளிப்படத்தன்மையில்லாமல் செயற்படுகின்றன. அமெரிக்கா பிழையான தகவல்களை வைத்து பிழையான தீர்மானங்களை இந்த விடயங்களில் எடுக்கின்றது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்த அமெரிக்க நிறுவனமொன்றின் பிரதிநிதிகளிடம் இது தொடர்பாகக் கூறினேன்.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவரலாயம், ஐக்கிய அமரிக்கா உதவித்திட்டம் ஆகியன இந்த விடயங்களில் பிழையான தீர்மானங்களை எடுப்பதாலேயே தேவையுடைய மக்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போவதற்கான காரணமாகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதங்களுக்கிடையிலான மோதல்கள் அதிகரிக்கின்றது.  இந்த மத மோதல்களுக்கும் வெளிநாட்டுப்பணம் பின்னணியிலுள்ளது. யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இந்துக்கள் உள்ள பிரதேசங்களே. இங்கு மக்களை தொடர்ந்தும் மோதல் நிலைக்கு வைத்துக்கொள்ளல், அத்தோடு மத மாற்றம் மேற்கொள்ளப்படல் இவை இரண்டும் இப்பிரதேசங்களில் இடம்பெறுகின்றன.
மத மாற்றத்திற்கு வறுமை ஒரு பிரதானமான காரணமாகவுள்ளது. வறுமையால் தமது மதத்தை விடுத்து  இன்னுமொரு மதத்திற்கு மாறுகின்றனர்.

குறிப்பிட்ட ஒரு மதத்தை மாத்திரம் திணிக்க முற்படக் கூடாது. மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் இறை ஆத்மீக சிந்தனையையும் ஏற்படுத்தி மக்களை சிறந்த சமூகமாக வாழ வைக்க வேண்டும்.

மதத்தில் சமூக சமய ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் மதங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கக் கூடாது. மட்டக்களப்பிலுள்ள மதத் தலைவர்கள் இதில் கரிசனை எடுத்து இ;வ்வாறான மத மோதல்கள் ஏற்படாதவாறு மக்களை வழி நடாத்த வேண்டும். அதேபோன்று புதிய மதஸ்தலங்களை உருவாக்கும்போது அரசாங்கம் கூறியுள்ள சட்ட வரையறைகளுக்குள் நின்று அவைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சொல்லப்பட்டுள்ள சமூக நல்லிணக்க வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும்போது, பகிரங்கப்படுத்தி அவைகளை மேற்கொள் வேண்டும். நல்லிணக்கத்துக்கு பங்களிப்புச் செய்வதை பகிரங்கப்படுத்த வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X