2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நல்ல திட்டங்களுக்கு த.தே.கூ. போல் ஐ.தே.க.வும் ஒத்துழைக்க வேண்டும்: சந்திரசேன

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பும் உதவியும் வழங்குவதுபோன்று,  ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் வழங்க வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை திங்கட்கிழமை (24) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்  மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த நிகழ்வில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களான ஜனா, பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பும் உதவியும் வழங்குவதுபோன்று,  ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்நாட்டில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2011ஆம் ஆண்டுவரை வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 02 வருடங்களாக இந்த ஒய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய 'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

60 வயதுடைய விவசாயிகளுக்கு 1,000 ரூபாவும் 63 வயதிலிருந்து 5,000  ரூபாவும்  ஓய்வூதியக் கொடுப்பனவாக வயதின் அடிப்படையில் வழங்கப்படும். 9 இலட்சம் விவசாயிகள் ஓய்வூதியக் கொடுப்பனவு பெற தகுதியானவர்களென்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக திறைசேரி மற்றும் கொவிசெத நிதியை ஒதுக்கீடு செய்துள்ளன. இதன் அடிப்படையில் இந்நாட்டில் விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றன.

2006ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளுக்கான உரமானியம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதுடன், கடன் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான சமூக நலக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.  இவ்வாறு அரசாங்கம் இந்நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் நன்மை கருதி பல நன்மைகளை மேற்கொள்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இங்கு சுட்டிக்காட்டினார். அவற்றை கிழக்கு மாகாண முதலமைச்சரின் உதவியுடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

இம்மாவட்டத்தின் அரசாங்க அதிபர், அமைச்சர், பிரதியமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கின்றனர். அதற்காக அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கிறேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X