2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காணாமல்போன பிள்ளைகளை கண்டுபிடித்துத் தர வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எம்.அனாம்


காணாமல் போன தங்களது பிள்ளைகளை கண்டுபிடித்துத் தருமாறு மன்றாடிக் கேட்பதாக கிரான் மற்றும் வாகரை பிரதேசங்களைச் சேர்ந்த பல தாய்மார்கள் கதறியழுது ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வேண்டுகோள் விடுத்தனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் கிழக்கு மாகாணத்தில்  வியாழக்கிழமை  (20) ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் இரண்டாவது அமர்வு கிரான் பிரதேசத்திலுள்ள றெஜி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (21)  நடைபெற்றது. இதன்போதே மேற்படி தாய்மார்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

இன்றைய அமர்வில் கிரான் பிரதேசத்திலிருந்து ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்த 26 பேரும்; வாகரை பிரதேசத்திலிருந்து விண்ணப்பித்த 22 பேரும் தங்களது சாட்சியங்களை பதிவுசெய்தனர்.

இதில் பிள்ளைளை இழந்த தாய்மாரே அதிகளவில்; சாட்சியமளித்தனர். மேலும்,  காணாமல் போன  கணவன்மார்களின் மனைவிகளும் இதன்போது சாட்சியமளித்தனர்.

மேற்படி ஆணைக்குழுவின் மூன்றாவது அமர்வு சனிக்கிழமை (22) மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இங்கு தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவிக்கையில்,
 
'எங்கள் அமைப்பால் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் செங்கலடி, வவுணதீவு, வெல்லாவெளி, கிரான், வாகரை, வாழைச்சேனை, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, மண்முனை போன்ற பிரதேச செயலகங்களில் நடத்திய விசாரணைகளில்; 1,526 முறைப்பாடுகளை சேகரித்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தோம்.

ஆனால், அவர்கள் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்களை அழைத்தே விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை (20) செங்கலடியில் 54 பேரும் வெள்ளிக்கிழமை (21) கிரான் மற்றும் வாகரையைச் சேர்ந்த 55 பேரும் சனிக்கிழமை (22) மண்முனை வடக்கைச் சேர்ந்த 55 பேரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். 

ஜனாதிபதி ஆணைக்குழுவானது சகலரையும் விசாரித்து சகலருக்கும் தீர்வு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
 
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X