2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அனந்தியின் சுயரூபம் தெரியுமா?; கிழக்கில் துண்டுபிரசுரம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வட தமிழ் அமைப்பினரால் உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவிதான் அனந்தி. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றிய இவர் தற்போது அரசியலுக்குள் புகுந்து குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக புலிகள் வலையப்பின் திட்டத்திற்கு அமைவாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்களா ?

இவர் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்புக்கள், சில புலம்பெயர் தமிழ்க் குழுக்கள், மீண்டும் புலிகள் தலையெடுப்பதற்கு உதவும் அமைப்புக்கள், மற்றும் மறைந்து வாழும் புலித் தலைவர்களின் உதவியோடு கூட்டமைப்பு சார்பாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதை நீங்கள் அறிவீர்களா ?
 
இவர் அரசியல் பலத்தைப் பெற்றவுடன் தமிழ்க் கலாசாரத்திற்கு ஒவ்வாத டெனிம் மற்றும் ரீ சேர்ட் அணிந்து கொண்டு புலிகளின் தேவைக்காக கனடா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுவதை நீங்கள் அறிவீர்களா ?

அங்கு செல்லும் போதெல்லாம் அவர் புலிகள் அமைப்பைச் சந்தித்துள்ளார். இவ்வமைப்புக்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லையென்பதினால் தனது ஆதரவுடன் மறுபடியும் புலிகளின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.

இந்த நோக்கத்திற்காக சட்டவிரோதமாகவும் மற்றும் கப்பம் மூலமும் புலிகளினால் சேர்க்கப்பட்டு இன்று வரை பகிரங்கப்படுத்தப் படாமல் இருக்கும் பணம் அனந்திக்குக் கொடுக்கப்படுகின்றது.

அனந்தி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றியபோது இவர் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்கு அங்குள்ள அரச அலுவலர்கள் பற்றிய தகவல்களை வழங்கியது உங்களுக்குத் தெரியுமா?

இறுதி யுத்ததத்தின் போது இரட்டை வாய்க்காலில் நின்ற பொதுமக்களிடம் இராணுவப் பாதுகாப்புப் பிரதேசத்திற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட இவருடைய கணவர் அப்பணத்தை அனந்திக்குக் கொடுத்து அனந்தி உட்பட பிள்ளைகள் மூவருடன் மேலும் ஆறு பேரைச் சேர்த்து டொல்பின் வானில் ஏற்றி ராணுவத்திட்ம் சரணடைவதற்காக அனுப்பி வைத்ததை நீங்கள் அறிவீர்களா ?

புலிகள் அமைப்பில் சிறுவர்களை கட்டாயமாகப் போரில் சேர்த்துக் கொள்ளும் பகுதிக்குப் பொறுப்பாக அனந்தியின் கணவர் எழிலன் இருந்தார்.

வலைஞர் மடம் செபமாலை மாதா ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியரைக் கடத்திச் சென்றது இவரது கணவர் எழிலன்தானே !!

அவ்வேளை செல்ல மறுத்த சிறுவர்கள் 4 பேரை அவ்விடத்திலேயே துடிதுடிக்க சுட்டுக் கொன்றது அனந்திக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் இன்று எங்கே உள்ளனர் ? இதற்கு சர்வதேச விசாரணை தேவையில்லையா ?

தனது குழந்தைகளுக்குத் தேவையான பாலுணவைப் பெற்றுக் கொள்ள இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட இரு குழந்தைகளின் தாயை குழந்தைகளின் கண்முன்னாலேயே தனது பிஸ்டலினால் தாயின் தலையில் சுட்டதை நீங்கள் அறிவீர்களா?
எனவே தனது கணவரின் குரூர செயற்பாடுகளைப் பற்றி அனந்தி அறிந்திருக்கவில்லையா ?

வடக்கில் வாழும் பெற்றோர்களிடம் புலிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்களின் கதி குறித்து அனந்தி எப்போதாவது பேசியதுண்டா ? கடத்தப்பட்ட கணவர்மார் பற்றி அவர்களது மனைவியரிடம் அனந்தி பேசியதுண்டா? இதற்கும் ஒரு சர்வதேச விசாரணை தேவையென்று அனந்தி ஏன் கோரவில்லை.? இவர் உண்மையில் தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றாரா என்று யோசித்துப் பாருங்கள் என்றும் அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X