2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'கல்குடா கல்வி வலயத்தின் சுற்றுநிருபம் வெளிப்படைத் தன்மையற்றது'

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் வெற்றிடத்திற்கு அதிபர் நியமனம் தொடர்பாக கல்குடா கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் வெளிப்படைத் தன்மையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கல்குடா வலய கல்விப் பணிப்பாளரினால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் அதிபர் சேவை 2II விண்ணப்பிப்பதற்கான தகுதி குறிப்பிடப்படாமல் மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு அதிபர் சேவை 2IIஐச் சேர்ந்தவர்கள் பங்குபற்றியதைக் கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் பி.உதயரூபன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் நியமிப்பு தொடர்பாக அரசாங்க கல்விச் சேவை ஆளணிக் குழுவினது இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு முரணாக கல்குடா கல்விப் பணிப்பாளரினால் வலயத்திலுள்ள சகல அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபம் வெளிப்படைத் தன்னமையற்றது.

செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு கல்குடா கல்விப் பணிப்பாளரினால் 2014.01.06 அன்று Bt/KK/ZEO/APP/Prin(Gen) என இலக்கமிடப்பட்டு வலயத்திலுள்ள சகல அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் அதிபர் சேவை 2II விண்ணப்பிப்பதற்கான தகுதியாக குறிப்பிடப்படவில்லை.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செங்கலடி மத்திய கல்லூரி அதிபர் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு அண்மையில் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் அதிபர் சேவை 2IIஐச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

மேற்படி கல்வி வலளத்தில் சகல கல்வித் தகைமைகளும் பூரத்தி செய்துள்ள அதிபர் சேவை தரம் 2ஐஐஐச் சேர்ந்த நிரந்தர ஆளணி சேர்ப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ள பெரும்பாலான அதிபர்கள் கல்குடா கல்விப் பணிப்பாளரது சுற்றுநிருபத்தினால் பாதிப்படைந்துள்ளனர்.

நம்பகத்தன்மையற்றதும் வெளிப்படைத்தன்மையற்றதுமான மேற்படி சுற்றுநிருபத்தின் மூலம் தூரநோக்கமற்ற அரசியல்வாதி ஒருவரின் கைக்கூலியை செங்கலடி மத்திய கல்லூரிக்கு பின்வழியால் அதிபராக நியமிப்பதற்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் முயல்வதாகவே இலங்கை ஆசிரியர் சங்கம் கருதுகிறது.
 
கடந்த வருடம் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்த வேளையில் பிரதிக் கல்விப்பணிப்பாளரினால் (நிருவாகம்) ஆசிரியர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆங்கில ஆசிரியர் மற்றும் கணித பாட ஆசிரியர் ஆகியோர் வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனால் தற்போது வெளிவந்த பரீட்சை முடிவுகளில் 7 மாணவர்கள் 8 பாடங்களில் சித்தி பெற்றிருந்த போதிலும் திறமையான ஆசிரியையின் இடமாற்றம் காரணமாக ஆங்கில பாடத்தில் டீ சித்தி பெற்றுள்ளனர் இதற்கு கல்குடா கல்வி வலயமே பதில் கூறவேண்டும்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது செங்கலடி மத்திய கல்லூரியின் கணித பாடத்தில் சித்தி பெற்ற மாணவர்களில் 22.54 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

தங்களது பிரதேச பாடசாலைகளை முன்னேற்றுவதற்காக வலயத்துக்கு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கும் பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்களை இடமாற்றும் நடவடிக்கை கல்குடா கல்வி வலயம் கைவிடவேண்டும் கல்குடா கல்வி வலயம் அரசியல்வாதியொருவரின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் கைக் கூலியாக செயற்படுகிறது.

கல்குடா கல்வி வலயத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறுத்தி சட்டஆட்சியை நிலை நிறுத்துவதை மேலான கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் பல தடவை மாகாண கல்வித் திணைக்களத்தைக் கோரியுள்ளது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X