2025 மே 02, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அறிவுறுத்தல்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், சட்டவிரோத மீன்பிடியினை உடனடியாக நிறுத்துமாறும் கடல்தொழில் நீரியல் வளத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் தொமிக்கு ஜோர்ச் ஏறாவூர் புன்னைக்குடாவில் இவ்வாறான மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து அறிவுறுத்தும் போது இன்று தெரிவித்தார்.

கடலில் மின் பிறப்பாக்கிகள் மூலம் மின்குமிழ்களை ஒளிரச் செய்து ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இவ்வாறான மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கதிரவெளியில் ஜெனரேற்றர்களுடள் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தலா 60 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டதுடன், அவர்களது ஜெனரேற்றர்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை புன்னைக்குடா பிரதேசத்திற்குச் சென்ற பிரதிப்பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் உடனடியாக இவ்வாறான மீன்பிடியில் ஈடுபடுவதனை நிறுத்துமாறு தென்பகுதி மாவட்டங்களில் இருந்து வருகைதந்து மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் கூறினார்.

கடலில் இருள் சூழ்ந்த நிலைமை காலநிலை காரணமாகக் காணப்படுகிறது. இன்னும் இரண்டுவாரங்கள் தமக்கு கால அவகாசம் தரும்படி இந்த மீன்பிடியார்கள் கோரிய போதும் கடல் தொழிலில் ஈடுபடும் சுமார் 600 வள்ளங்கள், தோணிகள், 115 கரைவலைகள் மாவட்டத்தில் உள்ளன. அத்துடன், இவர்களை நம்பி 5500 குடும்பங்களைச் சேர்ந்த 13500க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

இவ்வாறான சட்ட விரோத மீன்பிடியினால் சாதாரணமாக மீன் பிடியை நம்பி வாழ்வாதாரத்தினை நடத்துபவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு ஒளியைப் பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடுவது கடல்தொழில் சட்டங்களின் படி முற்றிலும் தவறானதாகும். எனவே உடனடியாக நிறுத்தாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோதமான செயற்படுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கதிரவெளி, மாங்கேணி, ஓட்டமாவடி, களுவன்கேணி உள்ளிட்டபகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபடும் போது கடலின் அடி ஆளத்தில் இருக்கும் மீன்களும் பிடிக்கப்படுகின்றன. இதனால் சாதாரணமான மீனவர்கள் வாழ்வாதாரத்தினை நடத்திச் செய்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் பிரதிப்பணிப்பாளர் ஜோர்ச் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .