2025 மே 02, வெள்ளிக்கிழமை

'அனைத்து விடயங்களுக்கும் அயலவர்களை எதிர்பார்த்திருக்கக்கூடாது'

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'கிராம மக்கள் தமது தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அதுபோல பிரச்சினைகளுக்கான தீர்வையும் எல்லோருமாகக் கலந்தாலோசித்து பெற்றுக்கொள்ளல் வேண்டும். அனைத்து விடயங்களுக்கும் அயலவர்களை எதிர்பார்த்திருக்கக்கூடாது' என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் ரீ.வசந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பன்குடாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள தளவாய் என்ற குக் கிராமத்தில் இடம்பெற்ற சிரமதான பணியில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களுக்காக மட்டுமே நாம் அயலாரையும் வெளி உதவிகளையும் எதிர்பார்க்கவேண்டும்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நமக்கு வெள்ளம் வரவில்லையா? பெருங்காற்று வீசவில்லையா? அப்போதெல்லாம் ஏற்பட்ட சேதங்களுக்காகவும் இழப்புக்களுக்காகவும் நம்மவர்கள் அயலாரையா எதிர்பார்த்திருந்தார்கள்? இப்போதெல்லாம் நாம் எடுத்ததுக்கெல்லாம் ஏன் அயலாரை எதிர்பார்த்திருக்க வேண்டும்? எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏன் நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டும்? நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டும். நிற்பதுக்கு எம்மால் முடியும்.

நம்மை நாம் அநாதைகளாகவும் அபலைகளாகவும் ஏழைகளாகவும் கருதக்கூhடாது. அப்படி நாம் இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது. நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளவும் தாழ்வாக நினைக்கவும் கூடாது.

அறிவும் அனுபவமும் பெருஞ்சக்தியும் நம்மிடம் இருக்கிறது. நம்மிடம் உள்ள வளம், வசதி, சக்தி என்பவற்றை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அதனால் நம்மை பிறர், அநாதைகள் என்றும் அபலைகள் என்றும் ஏழைகள் என்றும் சொல்லுகிறார்கள். அதனை நாமும் மனதார ஏற்றுக் கொள்கின்றோம்.

நாம் எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆவோம் என ஓர் அறிஞன் கூறினான். அவ்வறிஞனின் கூற்றுக்கிணங்க நாம் அப்படியே ஆகிறோம். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. எனவே நம்மிடம் உள்ள வளம், வசதி, அறிவு மற்றும் அனுபவங்களைக் கொண்டு நாமும் ஏனைய சமூகங்களைப் போன்று வாழ வேண்டும்.

இங்கு நீங்கள் மேற்கொண்ட சிரமதானத்தின் மூலம் உங்கள் மண்டபத்தின் சுற்றாடலை மிகவும் அழகு படுத்தியுள்ளீர்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இங்கே பயமின்றி வந்து போக முடியும் உங்கள் சின்னஞ் சிறார்கள் இங்கே வந்து விளையாடிச் செல்ல முடியும்.

இங்கே பாம்பு, பல்லி, பூச்சி ஏன் தீங்கிளைக்கும் மனிதர்கள் கூட இங்கே ஒழிந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு நீங்கள் யாருடைய உதவியுமின்றி இச்சூழலை சுத்தம் செய்திருக்கிறீர்கள். இத்தகைய நல்ல காரியங்கள் உங்களால் தொடரட்டும்' என்றார்.

இந்நிகழ்வில் கிராம முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் எஸ். நவச்செல்வம், கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன் கிராமத் தலைவர்கள் மற்றும் கிராம பொது மக்கள், சிரேஷ்ட செஞ்சிலுவைத் தொண்டர் எஸ்.கமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .