2025 மே 02, வெள்ளிக்கிழமை

மதுச்சாலைகளை திறக்க அனுமதி வழங்குவதில்லை

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானச்சாலைகளை திறப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு நான் எந்தவொரு சிபாரிசோ, அனுமதியோ வழங்குவதில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் கலாசார மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நான் அரசாங்க அதிபராக வந்ததன் பின்னர் எந்தவொரு மதுபானச்சாலையும்  திறப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கவுமில்லை. அதற்காக சிபாரிசு செய்யவுமில்லை. இது தொடர்பில்  பிரதேச செயலாளர்களிடம் விட்டு விடுவேன். ஆனால், அவர்களும் இதற்கு அனுமதி வழங்குவதுமில்லை. சிபாரிசு செய்வதுமில்லை.  

இருப்பினும், இவை எல்லாவற்றையும் மீறி எங்களது அனுமதியில்லாமல், சிபாரிசில்லாமல் மதுபானச்சாலைகள் திறப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நான் தெரிவிக்க விரும்புகின்றேன். இதைச் சுட்டிக்காட்டி மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பவுள்ளேன்.

இங்கு மாகாணசபை உறுப்பினரினால் காணி தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.  இந்தக் காணிப் பிணக்குகளுக்கு 03 வகையாக  தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  பிரதேச செயலாளர்களினால் தீர்க்கப்படாத காணிப் பிரச்சினைகளை  மாகாண காணி ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று மாகாண காணி ஆணையாளர் மூலமாக தீர்த்து வைப்பது, கற்றுக்கொண்ட  பாடங்கள் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள 03 காணி ஆணையாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைப்பது, இதற்கும் தீர்க்க முடியாத காணிப் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .