2025 மே 02, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி வறுமையொழிப்பு உணவுப்பொதி முத்திரை பெறுமதியை அதிகரிக்க வேண்டும்

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமுர்த்தி வறுமை ஒழிப்பு உணவுப்பொதி முத்திரைகளுக்கான  பணப் பெறுமதி அதிகரிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தற்போது மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாவது மாவட்டமாக உள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவான வளங்களைக் கொண்டமைந்த இம்மாவட்டம், வறுமையில் முதலாவதாக உள்ளது என்றால் இங்கு கூடியுள்ள   நாங்கள் இம்மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற நாம் அனைவரும் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.  உண்மையில் இது தொடர்பில் சற்று நாம் கவனம் செலுத்த வேண்டும்.

எமது மாவட்டத்தில் சுமார் 79,120 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக உள்ளனர். இவர்களுக்காக 45.71 மில்லியன் ரூபா மாதாந்தம் செலவிடப்படுகிறது. இவர்களில் குறிப்பாக 61,682 பேருக்கு 750 ரூபா பெறுமதியான வறுமை ஒழிப்பு சமுர்த்தி முத்திரையில் சமூகப் பாதுகாப்பு நிதி மற்றும் கட்டாய சேமிப்பு நீங்கலாக 595 ரூபாவுக்கு  மாத்திரம் உணவுப்பொதி வழங்கப்படுகிறது.

உண்மையில் இந்த உணவுப்பொதியின்; பெறுமதி போதுமானதாக இல்லை. எனவே, வறுமை பற்றி பேசுகின்ற நாம் இந்த உணவுப்பொதியின்; பணப்பெறுமதியை 1,500 ரூபாவாக உயர்த்த வேண்டும்.

கிராம மட்டத்தில் பாடசாலைக்கு செல்கின்றபோது போஷாக்கின்மையால் மயங்கி விழுகின்ற மற்றும் கல்வியில் ஈடுபாடிருந்தும் வறுமை தடையாகவுள்ள மாணவர்களை உள்ளடக்கிய குடும்பங்களுக்கு அது சென்றடையுமாயின் உண்மையில் வறுமையை ஓரளவேனும் எமது மாவட்டத்தில் குறைக்க முடியும்.

இதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட செயலகம் அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு விசேட குழுவை அமைத்து 3 மாதகாலத்திற்குள் இதற்கான தீர்வை தந்தால், உண்மையில் வறுமை குறையும் என்பது கண்கூடு' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .