2025 மே 01, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இரகசியமாக சாட்சியம் அளிக்கலாம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 08 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


காணாமல் போனவர்கள் பற்றி கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் பகிரங்கமாக சாட்சியமளிக்க சாட்சிகள் தயங்கினால், இரகசியமாக சாட்சியம் அளிக்க வசதிகள் செய்யப்படும். அவர்கள் இரசியமாக அளிக்கும் சாட்சியங்களின் விவரங்கள் ஒருபோதும் வெளிப்படுத்தப்படமாட்டாது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ.குணதாஸ தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் விசாரணைகள் பகிரங்கமாகவே நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்கள்  பற்றிய  விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த  சாட்சிகளுக்கு  அச்சுறுத்தல்கள் இருப்பதாக இதுவரை எவ்விதமான புகார்களும் பதியப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில்  காணாமல்; போனவர்கள் பற்றிய விசாரணைகள் கட்டங்கட்டமாக இடம்பெற்று வருகின்றன. காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கட்டங்கட்டமாக இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்த விசாரணை அமர்வுகளில் பங்கு பற்றிச் சாட்சியம் அளித்த சாட்சிகள் எவரும் சாட்சியம் அளித்ததின் மூலம் தங்களுக்கு பிரச்சினைகளோ, அச்சுறுத்தல்களோ ஏற்பட்டதாக முறைப்பாடுகள் எதுவும் பதியப்படவில்லை என்றும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் எதுவும் இலங்கையில் இல்லாத நிலையில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினாலும் அவ்வப்போது  கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் வெள்ளி, சனிக்கிழமைகளில் இடம்பெற்றநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு ஆரம்பமானது.

நேற்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து விண்ணப்பித்த 53பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என ஆணைக்குழுவின் இணைப்பாளர் டி.ஆர்.ஹெலி தெரிவித்தார்.

நேற்று காலை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமான ஆணைக்குழுவின் அமர்வு இன்று திங்கட்கிழமை மதியத்துடன் நிறைவு பெறவுள்ளது. இன்றைய தினம் 30பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஆணைக்குழுவுக்கு 300பேர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்பாளர் டி.ஆர்.ஹெலி மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .