2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலையிலிருந்து வந்த மகன் கடத்தப்பட்டான்; ஆரையம்பதியில் தாய் சாட்சியம்

Menaka Mookandi   / 2014 ஜூன் 09 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'ஆலயத்திற்கு போய் வந்துகொண்டிருந்த மகனை சுட்டுக் கொன்றார்கள். இன்னொரு மகன் பாடசாலையிலிருந்து வந்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டான் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை நேசம்மா என்ற தாய், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாட்சிகளின் இறுதி சாட்சியப் பதிவின் போதே மேற்படி தாய் சாட்சியமளித்தார்.

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் தொடர்ந்து சாட்சியமளித்த நேசம்மா கூறியதாவது,

'கடந்த 12.7.1989ஆம் ஆண்டு எனது மகன் பூபாலப்பிள்ளை திரேஸ்கான் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற தீப்பாய்வதில் கலந்துகொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும் வழியில் சுடப்பட்டார்.

அப்போது, என் மகனுக்கு 22 வயதாகும். அவரை டெலோ இயக்கமும் விசேட அதிரடிப்படையினருமே சுட்டதாக அறிந்தேன். இப்படி சுட்டுக் கொல்லப்பட்டவர் எனது மூத்த மகன் என்று அழுதுகொண்டே சாட்சியமளித்தார்.

அதேபோன்று, எனது இரண்டாவது மகன் பூபாலப்பிள்ளை சிறிகான், மட்டக்களப்பிலுள்ள பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தார். பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது அவரை கடத்தி விட்டார்கள். என் மகனை யார் கடத்தினார்கள் என்று தெரியாது. இரண்டு பிள்ளைகளை இழந்து தவிக்கின்றேன்' என அவர் கூறினார்.

இதேவேளை, ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிபிள்ளை நல்லதம்பி சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

'கடந்த 11.6.1997 அன்று எனது மகன் தங்கவடிவேல், பாடசாலைக்குச் சென்றவர் வீடு வரவில்லை. இவரை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என அறிந்தேன். யார் கடத்தினார்கள், எங்கு கொண்டு போனார்கள் என்பதுபற்றி  தெரியாது.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரைப்பற்றிய எந்தவொரு தகவலும் இதுவரை தெரியாது. எனக்கு அவர் ஒரு ஆண் பிள்ளை. மற்றைய இருவரும் பெண் பிள்ளைகள்' என்றார்.

ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி அருளய்யா என்பர் சாட்சியமளிக்கையில் கூறியதாவது,

'எனது மகன் சிவானந்தா வித்தியாலயத்திற்கு கல்வி கற்க செல்பவர். கடந்த 5.10.1995 அன்று பாடசாலையை முடித்துவிட்டு வந்து விளையாடுவதற்காக விளையாட்டு மைதானத்திற்கு சென்றவர் மீள வீடு வந்து சேரவில்லை.

தினமும் மாலை 5 மணிக்கு வீடு வந்து விடுவார். அன்றைய தினம் அவர்  வீடு வராததால் அவரை தேடிச் சென்றோம். பின்னர் அவர் கடத்தப்பட்டு விட்டதாக அறிந்தேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .