2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பொது பல சோனாவை தடைசெய்யும் பிரேரணை நிறைவேற்றம்

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபையில் வியாழக்கிழமை(19) நடைபெற்ற விசேட  அமர்வின்போது  நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரினால் சபையில் முன்வைத்த பொது பல சோனாவை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரேரணைகள் திருத்தங்களுடன் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

காத்தான்குடி நகர சபையின் விசேட அமர்வு வியாழக்கிழமை(19) காத்தான்குடி நகரசபை மண்டபத்தில் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரினால் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.

இலங்கையில் இனவாதத்தை தூண்டி வரும் பொது பலசேனா எனும் அமைப்பை ஒரு பங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தி அதை தடை செய்ய வேண்டும்.

அண்மைக்காலமாக இனக் குரோத கருத்துக்களை தெரிவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை கைதுசெய்ய வேண்டும்.

அளுத்கம மற்றும் தர்கா நகர் போன்ற பிரதேசங்களில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அவர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட தனித்தனியே நட்ட ஈடு வழங்கப்படல் வேண்டும்.

அரசாங்கம் இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும்.

மேற்படி வன்முறைச் சம்பவங்களுக்கு உடந்தையாகவும், ஆதரவாகவுமிருந்த பொலிஸாரை பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் விசாரணை செய்து தண்டனை வழங்கப்படல் வேண்டும்.

இனவாதத்தை தூண்டும் எந்தவொரு கூட்டத்திற்கோ பேரணிக்கோ அனுமதி வழங்கக் கூடாது,

பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் போன்ற பிரேரணைகள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.
காத்தான்குடி நகரசபை அமர்வின்போது காத்தான்குடி நகரசபை உறுப்பினர் திருமதி சல்மா ஹம்சா கண்டனத்தை வெளிப்படுத்தும் சுலொக அட்டையொன்றை தாங்கி அமர்வில் கலந்துகொண்டார்.

அளுத்கமை மற்றும் தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் இச் சுலொக அட்டையை தாங்கியிருந்தார்.  

இச் சுலோக அட்டையில், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றேன், அரசாங்கமே பொது பல சேனாவை தடை செய் போன்ற வசனங்கள் எழுதப்படடிருந்தன. 

இந்த அமர்வில் தலைவர் அஸ்பர், காத்தான்குடி நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.அலிசப்ரி, எச்.எம்.எம்.பாக்கீர், எம்.எஸ்.சியாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சல்மா ஹம்சா, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பிலான சுயேசட்சைக்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.சபில் நழீமி, எஸ்.எச்.பிர்தௌஸ் ஆகியோர் கலந்து காண்டனர்.

பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், ஆளும் கட்சி உறுப்பினர் றஊப் ஏ மஜீத் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X