2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு. பெண்கள் துணிச்சலானவர்கள்: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 25 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கடந்த காலத்தில்  இருந்த மட்டக்களப்பு பெண் போராளிகளே மிகவும் துணிச்சலானவர்கள். குறிப்பாக மட்டக்களப்பு பெண்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இதை  வெறுமனே கூறவில்லை. தன்னிடமிருந்த போராளிகளின் செயற்பாடுகளை வைத்து தான் கூறுவதாகவும் அவர் கூறினார்.

பெண் போராளிகள் 12,000  பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்ததாகவும் பிரதியமைச்சர் கூறினார். 

மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு சுயதொழிலுக்காக நிதி வழங்கும் நிகழ்வு  அப்பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் இராசமாணிக்கம் கலாசார மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.  இதில்  உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'என்னிடமிருந்த போராளிகளை 15 வருடங்கள் வழிநடத்தி வந்தவன் நான். இதனால், பெண்களின் உள்ளக்குமுறல்களை நன்கு அனுபவரீதியாக அறிந்திருக்கிறேன். கப்பலுக்கு கீழ் நீந்திச் சென்று தற்கொலை செய்து சாதனை படைத்த பெண்கள்.

தற்காலத்திலும் சாதனைகளை மாற்றியமைத்து எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சாதனை படைக்க வேண்டும். எமது மக்களின் வறுமையை ஒழிக்க அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டும்.

போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை இழந்த தாய்மார்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாக வழங்கப்படுகின்ற உதவிகள் சென்றடையுமென நான் எதிர்பார்க்கிறேன். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

பெண்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காகவே மகளிர் தினம் பெண்களின் கடின போராட்டத்தின் மூலம் பெறப்பட்டிருக்கின்றது. அதனால்தான், ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது அவர்களுக்கான உரிமை சம்பந்தமான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

எமது மாவட்டத்தில் பெண்களின் வாழ்க்கையானது யுத்தம் காரணமாக பின்னோக்கிச் சென்றுள்ளதை  என்னால் அவதானிக்க முடிகின்றது. இதனை நாங்கள் ஒன்றிணைந்து முன்னேற்றத்திற்கு கொண்டுவர வேண்டும்.

என்னை துரோகி என்கின்றார்கள். நான் செய்த பிழை என்ன? ஆறாயிரம் போராளிகளை நிம்மதியாக இருப்பதற்கு காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பியது பிழையா? நாங்கள் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை சிந்தித்து பாருங்கள். தற்போதைய நிலைக்கும் அப்போதைய நிலைக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு என்பதை  எமது மக்கள் நன்கு அறிவீர்கள். 

நாங்கள் எமது மாவட்டத்தின் அரசியலை மாத்திரம் சிந்திக்க வேண்டும். வேறு மாவட்டத்தின் அரசியலை கொண்டு எமது மாவட்ட மக்களுக்குள் திணிக்கின்றனர். வேறு மாவட்டத்தினரால் எடுக்கப்படும் முடிவுகள் எமது மாவட்ட மக்கள் மீது திணிக்கப்பட்டு எமது மக்கள் அதற்கு பலிக்கடாவாகக் கூடாது.

நான் இருக்கும்வரை என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். என்னை நீங்கள் நன்கு பயன்படுத்தலாம்.

அன்பார்ந்த தாய்மார்களே! உங்களது பிள்ளைகளை மிகவும் கவனமாக படிப்பிப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். காரணம் கல்வியானது மிகவும் போட்டியில் போய்க்கொண்டிருக்கின்றது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .