2025 மே 03, சனிக்கிழமை

'தமிழ் மக்களின் அரசியல் ரீதியான வெற்றிடமே பாதிப்புக்களுக்கு காரணம்'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


தமிழ் மக்களின் அரசியல் ரீதியான வெற்றிடம்தான் பல பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது. இதை மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என மீள்;குடியேற்ற  பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினரின் நலன்களை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில்  தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும்   எனவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி பிரதேச கமநல அபிவிருத்தித் திணைக்கள காரியாலயத்துக்கான  அடிக்கல் இன்று புதன்கிழமை (16) நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'களுவாஞ்சிக்குடி பிரதேசம் வளர்க்கப்பட வேண்டிய பிரதேசமாகும். இந்த நிலையில், இங்கு  பல அரசாங்க காரியாலயங்களும் அமையவேண்டும். அவ்வாறு  அரசாங்க  காரியாலயங்களை அமைத்து உயர்ச்சி பெற்றுவரும் நிலையில், இதுவரை காலமும் பிரதேச சபையாக செயற்பட்டுவரும் இப்பிரதேசத்தை  நகரசபையாக மாற்றுவதற்குரிய முயற்சிகளை தற்போது  நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

களுவாஞ்சிக்குடி பிரதேச சபை, நகரசபையாக மாற்றுவதற்கு வட்டாரமுறைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிற்பாடு தான்  இது பற்றிய சாதகமான முடிவு கிடைக்கப் பெறும் என எம்மிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்திருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களை பொறுத்தவரை மட்டக்களப்பு மாநகரசபையைத் தவிர வேறு எந்தவொரு இடத்திலும் நகரசபை இல்லை.  ஆனால் சகோதர முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் பல நகரசபைகளை உருவாக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் அரசியல் ரீதியான வெற்றிடம்தான் இவ்வாறான பல பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது. இதை எமது மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். எமது எதிர்காலச் சந்ததியினரின் நலன்களை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் எமது தமிழ் மக்கள் அரசியல ரீதியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும். 

களுவாஞ்சிக்குடி பிரதேச மக்கள் நினைத்தால் எதிர்காலத்தில் ஆளும் கட்சியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை உருவாக்கலாம். இதுபோன்ற பல கட்டடங்களை உருவாக்கலாம். ஆனால், இப்பகுதியில் மாற்றம் வருவது குறைவாக இருக்கின்றது.

எமது மக்கள் தேவைகளை மாத்திரம் அரசாங்கத்திடம் கேட்கின்றனர்.  ஆனால், ஆதரவளிக்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கின்றனர். இதனால்; பாரிய வளர்ச்சியைக்; கொண்டுவருவதில் சிரமம் உள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அபிவிருத்தி, இந்த கருணா அம்மானின் காலத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது. எதிர்காலத்திலும் அவை தொடர வேண்டும்.  அதற்கு எமது மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைய வேண்டும்.

தற்போதுள்ள ஆளும் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவராக நான் இருக்கின்ற காரணத்தால்,  மட்டக்களப்பின் பல அபிவிருத்திகளுக்கு நிதியைக் கொண்டுவர முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியினருக்கு எதுவித வேலையும் கிடையாது. அடக்குமுறைகள், அநீதிகள் நடக்கும்போதுதான் எதிர்க்கட்சிகள் தேவை.  இங்கு அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ஆகவே எமக்கு எதிர்க்கட்சிகள் தேவையில்லை. எமக்கு தேவையானவை அபிவிருத்திகள் மாத்திரம்தான். 

இம்முறை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், அதிகளவு நிதி பட்டிருப்பு தொகுத்திக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திகள் நான் இருக்கும் வரைக்கும் நடைபெறும் நான் இல்லாவிட்டால் பாரியதொரு வெற்றிடம் வரும்.

தற்போது யழ்ப்பாணத்தில் உள்ள மக்களை விட எமது மக்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான மக்கள் விவசாயிகளாக  இருக்கின்றனர். 

தற்போது விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால் நட்டஈடுகள் வழங்கப்படுகின்றன, ஓய்வூதியம் வழங்கப்படுகின்றன, காப்பறுதிக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன, மானிய விலையில் 500 ரூபாய்க்கு உரம் வழங்கப்படுகிறது.  இவ்வாறு அரசாங்கம் செய்யும் உதவிகளை பெறும் எமது மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்களேயானால் ஒரு வாக்குக் கூட எதிர்கட்சிக்கு விழ மாட்டாது. ஆனால், எமது மக்கள் உதவிகளை மாத்திரம் பெற்றுவிட்டு எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எதுவித அபிவிருத்திகளையும் செய்யவில்லை. ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும திட்டத்தினூடாக வருடாந்தம் 15,000 குடும்பங்கள் நன்மையடைகின்றன.  மின்சாரம் 90 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.  இதுபோன்ற பல செயற்றிட்டங்களால் மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டுவருகின்றது. இன்னும் பாரிய தேவைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உள்ளது.

தற்போது இரணைமடுக்குளத்து தண்ணீரை யாழ்ப்பாண மக்களுக்கு கொடுக்கக்கூடாது என அங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் தடுக்கின்றது. ஆனால், அம்பாறையில் சிங்கள பிரதேசத்திலிருக்கின்ற குளங்களிலிருந்து எமது படுவான்கரைப் பகுதி அனைத்துக்கும் தண்ணீர் வழங்கப்பட இருக்கின்றது. இதற்கு ஒரு சிங்கள மகனும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்வாறான பெருந்தன்மையுடன் நாமும் இருக்க வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X