2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீளாய்வுக்கூட்டத்தில் ஆசன ஒதுக்கீடு நெறிமுறை மீறியதாக த.தே.கூ. குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்மந்தமான மீளாய்வுக்கூட்டத்தின்போது,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உரிய இடத்தில் ஆசனங்கள் வழங்கப்படாமையால் முறுகல் நிலையுடனேயே கூட்டம்  ஆரம்பமானது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்பட்ட  வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமணிக்கம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இமா. நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு  மீள்குடியேற்றப் பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு மாத்திரம் அரசியல்வாதிகள் சார்பில் முன்பக்கத்தில் பெயர் பொறிக்கப்பட்ட ஆசனம் வழங்கப்பட்டது.

ஏனைய அரசியல்வாதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால், கூட்டத்துக்கு  வந்த திணைக்கள பிரதிநிதிகளுடன் இருக்கவேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையிலேயே,  இக்கூட்டத்தில் முறுகல் நிலைமை  ஏற்பட்டது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவிக்கையில்,  நாங்கள் மக்களின் பிரதிநிதிகள்.  அரசியல்வாதிகள் அனைவரும் ஓன்றுதான். இது எங்களை அவமதிக்கும் செயல். முன் வரிசையில்  ஆசனம் வழங்காவிட்டால் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லலை.  இது தவறான செயற்பாடு எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவிக்கையில், நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கூறினார்.

மாகாணசபை உறுப்பினர் மா.நடராசாவும்  தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.

இதைக் கேட்டறிந்த  பிரதியமைச்சர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்களை அவதானிக்கும் மீளாய்வுக்கூட்டமே இது. இதற்கு ஏன் தமிழத்; தேசியக் கூட்டமைப்பினரை அழைத்தீர்கள்? அவ்வாறு அழைத்தால் அவர்களுக்கு உரிய இடம் வழங்கவேண்டும் என பிரதேச செயலாளருக்கு தெரிவித்தார்.

இதற்கான சுற்றுநிரூபத்தை பிரதேச செயலாளர் அமைச்சரிடம் காட்டினார். பிரதேச செயலாளரிடம் வாங்கி அவர் பார்வையிட்டார்.
இந்நிலையில் கூட்டத்துக்கு வந்த   அனைத்து பிரதிநிதிகளும் இவற்றை  அவதானித்தனர்.

இதையடுத்து பிரதியமைச்சர் அனைவரையும் முன் ஆசனங்களில் வந்து அமர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இதற்கமைய தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் முன் ஆசனங்களில்; வந்து அமர்ந்து கொண்டனர். இதன் பின்னரே கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X