2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

"ஒழுக்காற்று நடவடிக்கை உட்படுத்தப்பட்டவர்களே கட்சி மாறுகின்றனர்"

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களே ஏனைய கட்சிகளில் இணைகின்றனர் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் ஏனைய கட்சிகளில் இணைவது அவர்களது ஜனநாயக உரிமையாகும்.

சுயலாபத்திற்காகவோ அல்லது வெறுமனே அரசியல் பதவிகளுக்காவோ அரசியல் நீரோட்டத்திற்கு வந்த கட்சியல்ல எமது கட்சி.  பாதிக்கப் பட்டு ஒடுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் விடிவுக்காக ஆயுதமேந்தி உயிர்களை தியாகம் செய்து துணிந்து போராடி ஆயுதப்போராட்டம் மூலம் எமது சமூகத்திற்கு மிஞ்சுவது இறப்பும் அழிவும்தான் என்பதை தீர்க்கமாக சிந்தித்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்ததே எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியாகும்.

2008ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாண சபை ஆட்சியினை  சிறப்பாக செய்து காட்டியதுடன் இன்றும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சியே எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியாகும்.

இக்கட்சியில் இருப்பவர்களும் சரி இக் கட்சிக்கு வருபவர்களும் சரி இதய சுத்தியுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுவே எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தினின் உயரிய சிந்தனையாகும்.

பொய் வாக்குறுதிகளை கொடுப்பது மக்களை முறையற்ற விதத்தில் வழி நடாத்துவது ஊழல் புரிவது துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவது மது பாவனை போன்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களை கட்சியின் செயற்குழுத் தீர்மானங்களுக்கமய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கட்சியின் பதவிகளில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்குவதே எமது கட்சியின் வழக்கமான நடைமுறையாகும்.

இதற்கமைய எமது கட்சியின் சில தவிசாளர்கள், நகர சபை மற்றம் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய விசாரணை செய்து நீக்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.

அத்தோடு உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னரும் பொதுமக்களாலும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களினாலும் கிடைக்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய கட்சியின் உயர் பதவி வகித்தவர்கள் மற்றும் கட்சியின் உறுப்புரிமை பெற்றிருந்த சிலரின் செயற்பாடுகள் சமூக முரண்பாடானா செயலாக அமைந்திருந்ததால் அவற்றை விசாரணை செய்து ஒழுக்காற்றுக்குழு அறிக்கையின் பிரகாரம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளதுடன் இன்னும் சிலர் வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர்.

அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும். மக்களின் நலன்களுக்கு எதிராக சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை கட்சிக்குள் வைத்துக் கொண்டு போலி அரசயில் செய்வதற்கு எமது கட்சி ஒருபோதும் தயாரில்லை.

ஆனால் அவ்வாறு வேறு கட்சிகளுடன் இணைபவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர் பதவியில் இருந்தார்கள் அந்தப்பதவிகளை வகித்தவர்கள், இந்தப்பதவிகளை வகித்தவர்கள் என மெருகூட்டி ஊடகங்கள் செய்தி வெளியிடுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

அவ்வாறு செய்திகள் வெளிவரும்போது அவற்றை உறுதிப்படுத்தி வெளியிடுமாறும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X