2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே'

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல் 


கடந்த யுத்தத்தில்  அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 20,000 இற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவியர்கள் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி  அமைச்சின்  10 இலட்சம் ரூபாய் செலவில் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் பொதுக்கட்டடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில்,

'3,170 இலட்சம் ரூபாய் நிதி போரதீவுப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான நிதி ஒட்டுமொத்த மாவட்டத்துக்கே  ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், இவ்வளவு பெருந்தொகை நிதியை பிதேசங்களின் அபிவிருத்திகளுக்கு ஒதுக்கீடு செய்து வருகின்றோம்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வந்ததை நான் தான் நிறுத்தினேன். அவ்வாறு நிறுத்தியதுக்காக  பல கெட்ட பெயர்களையும் பெற்றுக்கொண்டேன். ஆனால், அந்நிலை தொடர்ந்திருந்தால் இளைஞர்கள் மாத்திரமின்றி வயோதிபர்களும் தற்பபோது உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள்.  பாரிய இழப்புக்களிலிருந்து எமது மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது உலக நாடுகளில் ஆயுத மோதல் உக்கிரமடைந்துள்ளன. அவ்வாறான யுத்தத்திலிருந்து எமது மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்களின் வரலாற்றில் சரியான அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளாததினாலேயே யுத்தம்  உருவாகியது. இதனாலேயே தமிழர்கள் யுத்தத்தினுள்  தள்ளப்பட்டனர்.  யுத்தத்தினுள் ஈடுபடாமலிருந்தால்  இன்னும் பாரிய வளர்ச்சி எம்மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும்.

கடந்த யுத்தத்திலிருந்து விடுபட்டு தற்போதே எமது மக்கள் வாழத் தொடங்கியுள்ளனர். இந்த வாழ்க்கையிலிருந்து முன்னேற்றகரமாக மக்கள் விளங்கி செயற்பட வேண்டும். இச்சந்தர்ப்பத்தை  பயன்படுத்தி மக்கள் தங்களது பிள்ளைகளை நன்கு கற்பித்து வளர்த்துவிட வேண்டும். அதை விடுத்து பழைய விடயங்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தால் வளச்சியடைய முடியாது.

நான் செய்துள்ள வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசியல் சரித்திரத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவில்லை. அந்தளவுக்கு  பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். குழாய் மூலம் குடிநீர் திட்டம், வீதி அபிவிருத்தி, மின்சார வசதி, பாலங்கள் அமைத்தல் போன்ற அபிவிருத்திகளை  மக்கள் என்னிடம் கேட்காதபோதிலும், செய்து வருகின்றேன். 

படுவான்கரையில் மின்விநியோகத்துக்காக   மட்டும் 6,000 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.  மிகக் குறுகிய காலத்தில் படுவான்கரையில் வீதி அபிவிருத்தி, மின்விநியோகம்,  குழாய் மூலம் குடிநீர்த்திட்டம் போன்றன மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், மக்களின பொருளாதாரம் உயர்த்தப்பட்டு வருகின்றது. வாழ்க்;கையில் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

எமது தமிழ் மக்கள் பத்திரிகைகளில் வரும் அறிக்கைகளை மாத்திரம் பார்க்காமல், கல்வி வளர்ச்சி வீதத்தையும் எமது சமூகத்தை  விட ஏனைய சமூகம் எவ்வாறு முன்னேறிக்கொண்டு செல்கின்றது என்பதையும் பார்த்து ஒப்பிட்டு நோக்க வேண்டும். இதற்காக வேண்டி நான் இரவும் பகலும் இடைவிடாது செயற்படுகின்றேன்.   இது எனது கடமையாகும். இவற்றுக்கு எமது மக்களும்  ஒத்துழைக்க வேண்டும்.

அரசாங்க  வளத்தைப்; பயன்படுத்துவதற்கு தவறுகின்றமையால்,  எமது சமூகம் கீழ்மட்டத்திலிருக்கின்றது. ஆனால், அரசாங்கத்தை எமது சகோதர முஸ்லிம் மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்துகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற 263 மகளிர் சங்கங்களுக்கு தலா  ஒரு இலட்சம் ரூபாய் படி  263 இலட்சம் ரூபாய் நிதி இவ்வருடம் என்னால் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் அரசாங்க கட்சியில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களேயானால், எமது மக்களின் அபிவிருத்தி இன்னும் பாரிய அளவில் மேலோங்கிச் செல்லும். 

எமது மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, வாக்களித்து எந்தவித நன்மையும் பெறவில்லை. மட்டக்களப்பிலுள்ள மூன்று தொகுதிகளிலும் ஆளும் கட்சியிலிருந்து தலா ஒவ்வொரு உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு  அனுப்பிவிட்டால், அவர்கள் எந்தநாளும் எமது மக்களை பற்றிச் சிந்தித்து பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு தமிழ் அமைச்சராக  நான் மட்டும்தான் இருந்து செயற்பட்டு வருகின்றேன்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். வெல்லக்கூடிய ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் மக்களை கொன்றழித்த சரத் பொன்சேகாவுக்குத்தான் எமது மக்கள் வாக்களித்தார்கள். இந்த நிலைமை எதிர்காலத்தில்  ஏற்படக்கூடாது' என்றார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X