2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழினத்தை உலுக்கிய படுகொலையே சத்துருக்கொண்டான் சம்பவம்: அரியநேந்திரன்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சத்துருக்கொண்டான் படுகொலையானது ஒட்டுமொத்த தமிழினத்தை உலுக்கிய படுகொலையாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் 24ஆவது வருட நினைவுதினம் சத்துருக்கொண்டான் காளி கோவில் நுழைவாயிலில்; செவ்வாய்க்கிழமை (09) அனுஷ்டிக்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'சத்துருக்கொண்டான் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தவிடாமல் பொலிஸார் தடுக்கின்றனர்.
தமிழ் மக்கள் வகைதொகையின்றி  இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு கிடங்குகளில் போட்டு எரித்த வரலாறுகளே அதிகம் உண்டு.
அவர்களின் நினைவாக ஒரு சுடரை ஏற்றி, உயிர்நீத்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முடியாத நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் தமிழ் பிரதேசங்களில் நன்கு திட்டமிட்ட முறையில் தமிழினப் படுகொலைகள் நடந்தேறியிருக்கின்றன. 

கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் அவர்களால் நினைவுகூர முடிகின்றது. அவர்களுக்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், இலட்சக்கணக்கான தமிழ் மக்களை இழந்த அவர்களுக்காக அவர்களை நினைவுகூர முடியாதவாறு தமிழினம் இலங்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இதை அரசாங்கத்துடன் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர முடியாத நிலையிலேயே தமிழ் மக்கள் இன்றிருக்கின்றனர்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X