2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யுத்தம் இடம்பெற்றபோது காடுகள் வேகமாக அழிக்கப்பட்டன: முஹம்மத் ஹனீபா

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 16 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


யுத்தம் இடம்பெற்ற வேளையில் பல்வேறு காரணங்களால் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மிச் நகர் கிராமத்தில் 'தேசத்துக்கு நிழல்' மரநடுகைத்திட்டத்தை சனிக்கிழமை (15)  ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இலங்கையின் வனவளத்தை மிக விரைவாக அதிரிக்கவேண்டும் என்பதே 'தேசத்துக்;கு நிழல்' திட்டத்தின் நோக்கமாகும். இன்னும் ஐந்து  வருடங்களில் வனவளம் நிறைந்ததொரு நாடாக எமது நாடு இருக்க வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு இந்த 'தேசத்துக்கு  நிழல்' மரநடுகைத் திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வனவளத்தை பாதுகாக்கவேண்டும் என்ற அறிவு இல்லாமை, சேனைப்பயிர்ச் செய்கை போன்ற பல்வேறு காரணங்களால் காடுகள் வேகமாக அழிக்கப்பட்டன.

சமீப காலமாக அதிக வரட்சியை எமது நாடு எதிர்கொண்டது. இதற்கு காடு அழிப்பு பிரதான காரணம். மழை வீழ்ச்சி குறைந்தால் விளைச்சல் குறைந்து வறுமை மேலோங்கும்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்துக்கு முன்னர் இருந்த வனவளம் இப்போது இல்லை. சோலை வனங்களாக இருந்த ஒரு சில பகுதிகள் இப்போது பாலைவனமாக மாறியிருக்கிறது.

மேலும், சூழல் சமநிலை பாதிக்கப்படுவதற்குக் காரணம் காடு அழிப்பாகும்.

பல அழிவுகளிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கவேண்டுமாக இருந்தால், வனவளம் பாதுகாக்கப்படவேண்டும். இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதுடன், இன்னுமின்னும் எங்கெல்லாம் மரங்கள் வளர்க்கமுடியுமோ அங்கெல்லாம் மரம் வளர்த்து எமது தேசத்தை பாதுகாக்கவேண்டும்.
ஒரு மரத்தை நாம் வெட்டுவதற்காக கைவைக்கின்றபொழுது, எமது எதிர்கால சந்ததியை நாம் அழிக்க முற்படுகின்றோம் என்கின்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

மரம் வளர்ப்பது எமது சூழல், சுற்றாடலை பாதுகாப்பதுடன்,  எமது வருமானத்தையும் அதிகரிக்க உதவுகின்றது' எனக் கூறினார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X