2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'தமிழருக்கு அதிகளவான பிரச்சினைகள் உள்ளன'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்களுக்கு அதிகளவான  பிரச்சினைகள் உள்ளன. இது  உண்மை என்பதை தான் அறிந்துள்ளதாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்ததினத்தை முன்னிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் ஏற்பாட்டில் ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தமிழ் மக்களுக்கு அதிகளவான  பிரச்சினைகள் உள்ளன. இது  உண்மை என்பதை நான் அறிந்துள்ளேன். இந்த நிலையில், நான் ஓர்  உண்மையை கூறுகின்றேன். தமிழ் மக்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் சரி  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவே  மீண்டும் ஜனாதிபதியாக வருவார். இது  உண்மை. 

தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவே இந்த நாட்டின்  ஜனாதிபதியாக மீண்டும் வரப்போகின்றார். இது உண்மை.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கதைப்பதற்கு எவருமில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் அவர்களின்  சமூகம் சார்ந்த அமைச்சர்கள் உள்ளார்கள்.  கிழக்கு மாகாணசபையிலோ, நாடாளுமன்றத்திலோ கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவித தமிழ் அமைச்சர்களும் இல்லை. இது தொடர்பில் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் சற்றுச் சிந்திக்கவேண்டும்.

தமிழ் மக்களுக்கு இலவசமாக ஒருசொட்டு நீர் கூட எவரும் தரமாட்டார்கள். அனைத்தையும் இந்த அரசாங்கமே வழங்குகின்றது. என்னைப் பொறுத்தவரையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி நான் சேவை செய்கின்றேன். இந்த நிலையில், எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 வருடங்களாக முதலமைச்சர் பதவியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இருந்தார். தற்போது கிழக்கு மாகாணசபையில் ஒரு தமிழ் அமைச்சர் கூட இல்லை.

கிழக்கில் 95 சதவீதமான பாடசாலைகள் மாகாணசபை நிர்வாகத்தின் கீழுள்ளன. அதேபோல், 5 வைத்தியசாலைகளை தவிர, ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாணசபையின் கீழுள்ளது. இவை இவ்வாறிருந்தாலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாணசபையில் ஓர்  அமைச்சர் கூட இல்லை.

நான்  மட்டும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைச்சர். ஏனைய 4 பேரும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள். என்னிடம் அதிகளவான  தமிழ்ப் பிள்ளைகள் தங்களுக்கு லேபர்; வேலை பெற்றுத்தருமாறு விண்ணப்பங்கள் தந்துள்ளார்கள்.

தமிழ் மக்கள் தண்ணீர், வீதி, மின்சாரம், வைத்தியசாலை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கேட்கின்றார்கள். ஆனால், வாக்குகளை மாத்திரம் எதிர்த்தரப்புக்கு போடுகின்றார்கள்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X