2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

முஸ்லிம் சமூகம் தெளிவாக சிந்தித்து செயற்படவேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம்,  மிகத் தெளிவாக சிந்தித்து  செயற்;படவேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு வீடுகளை  திருத்துவதற்கான மானியம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமை (23) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'நாங்கள் கடந்தகாலங்களில் துன்பங்களை அனுபவித்தோம். அத்துன்பங்கள் மீண்டும் இம்மண்ணில் இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.

சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாங்கள், மிகக்கவனமாக அரசியல் தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குப்பலத்தோடு, யார் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார் என்பதை புரிந்துகொண்டு இந்தச் சமுதாயத்தை வழிநடத்தவேண்டிய தேவையும் கடப்பாடும் எங்களுக்குண்டு.

அண்மைக்காலமாக எமது நாட்டில் சில பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படுத்துகின்ற பல்வேறுபட்ட சூழ்நிலைகள், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக தொடுத்துவருகின்ற குரல்கள் என்பன  போன்ற சூழ்;நிலைகளுக்கு மத்தியில்  முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் சக்திகளாக நாம் மாறவேண்டும்.

பௌத்த தீவிர சக்திகள் எதை விரும்புகின்றதோ, அதற்கு துணைபோகும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கக்கூடாது.
எதிர்ப்பு அரசியல் செய்கின்ற ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கவேண்டும் என்று எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவமும் எமக்கு வழிகாட்டவில்லை.

எமது மறைந்த மாபெரும் தலைவர்களான எம்.எச்.எம்.அஸ்ரப், டாக்டர் எம்.சி.எம்.கலீல், சேர் றாசீக் பரீட், டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்ற தலைவர்கள், முஸ்லிம் சமூகத்துக்கு காட்டிக்கொடுத்த வழிமுறைகளை இந்த முஸ்லிம் சமுதாயம், அரசாங்கத்தோடு இணைந்து பெரும்பான்மை சமூகத்தோடு சேர்ந்து முஸ்லிம் சமுதயாத்தை  பாதுகாக்கவேண்டும் என்ற பாடத்தையும் அனுபவத்தையும் புகட்டித்தந்துள்ளார்கள்.

மாறாக, எங்களுடைய சகோதர சமூகமான தமிழ்ச் சமூகம் எதிர்ப்பு அரசியலை செய்ததற்காக அனுபவித்த துன்பங்களை நாங்கள் அறிந்துவைத்துள்ளோம். கோடிக்;கணக்கான சொத்துக்களை, இலட்சக்கணக்கான மக்களை இழந்து அகதிகளாக இன்னும் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிழையான வழிகாட்டல்களால், தமிழ்ச் சமூகம் அனுபவித்த துன்பங்களை நாங்கள் நேரில் கண்டவர்கள். அத்துன்பங்களை முஸ்லிம் சமுதாயம் அனுபவிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் எனத் தெளிவாக  கூற விரும்புகின்றோம்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X