2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எமது கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொள்ளவில்லை: சுபைர்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக எமது கட்சியால் மூன்று உயர்பீட கூட்டங்கள்  நடத்தப்பட்டன. பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  இரண்டு முறை  இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார். இறுதியாக  நடைபெற்ற உயர்பீட கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தும், அவர் கலந்துகொள்ளவில்லை என்று கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து வெளியேறியதை அடுத்து புதன்கிழமை (24) மாலை சொந்த ஊரான ஏறாவூருக்கு விஜயம் செய்த எம்.எஸ்.சுபைருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதற்காக எமது கட்சியால்  மூன்று உயர்பீட கூட்டங்கள் நடத்தப்பட்டன.  பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்  இரண்டு முறை இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார். இறுதியாக  நடைபெற்ற உயர்பீட கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டிருந்தும், அவர் கலந்துகொள்ளவில்லை.
உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட அமர்வில் பெரும்பான்மையான  உறுப்பினர்கள், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். ஜனநாயக கட்சி என்ற அடிப்படையில் அதிகப்படியான உறுப்பினர்களின் கருத்துக்கு செவி சாய்த்து தலைமையும் உயர்பீட உறுப்பினர்களும் இணைந்து பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தோம்.

பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஏன் இந்த அநியாயத்தை செய்கிறீர்கள் என்று நான் கேட்கின்றேன். ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற எங்களுக்கு உங்களது அதிகாரத்தை கொண்டு எங்களை கடத்துவதற்கும் அச்சுறுத்தல் செய்வதற்கும் சதி செய்யாதீர்கள்.  மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்  இருந்தபோது, எவ்வாறு செயற்பட்டீர்கள் என்பதை  மக்கள் அறிவர்.

எமது தலைமையும் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு எங்களது கட்சியின் பிரதேச உறுப்பினர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறான செயல்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
எங்களது சமூகம் மிகவும் கவலையோடு இருக்கின்றது. உங்களின் கபடத்தனமான வேலைகளை விட்டுவிட்டு மீண்டும் கட்சியோடு இணைந்து இந்த சமூகத்தை காக்கும் பணியில் ஈடுபடுங்கள். எமது தலைவர் ரிசாட் பதியுதீன் தனது அதிகாரமிக்க அமைச்சு பதவியை தூக்கி எறிந்துவிட்டு சமூக காவலனாக உங்கள் முன் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்க வந்துள்ளதால், நீங்களும் அந்த பயணத்தில் இணைந்துகொண்டு பொதுவேட்பாளரை வெற்றி பெறச் செய்ய உதவவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X