2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மதத்துக்கு அப்பால் பட்டதே மனிதம்: அப்துல்லாஹ்

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மனிதம் என்பது மதத்துக்கு அப்பால் பரந்து விரிந்த நோக்கங்களைக் கொண்டது. அது பாகுபாடுகள், பேதங்களைக் கடந்து நிலை நிறுத்தப்பட வேண்டிய ஒன்று என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவான் என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவித்து பரிசு வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு, அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான மனித சேவைகள் நிறுவனத்தின் (Serving Humanity through Empowerment and Development) தலைவர் கே. அப்துல் வாஜித், தலைமையில் நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நம்பிக்கை வைப்பது மனிதத் தன்மையின் முதலாவது விடயம். மனிதன் எப்பொழுதும் நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும்.
உண்மையும் பொறுமையும் மனிதனிடம் இருக்க வேண்டிய மிகச் சிறந்த பண்புகளாகும். இந்த நான்கு விடயங்களையும் மனிதம் என்பது குறித்து நிற்கின்றது.

நாம் இன, மத பேதங்களுக்கப்பால் மனிதர்களை மதிக்கின்றவர்களாகவும் அவர்களுக்குச் சேவை செய்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

இன்னொரு மனிதனைத் தூஷிக்கின்றவன் மனிதனாக இருக்க முடியாது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி அதன்படியே செயற்பட்டுத் திரிபவன் மனிதத்துவம் உள்ளவனாக இருக்க முடியாது.

முழு மனித சமுதாயத்தையும் மதிக்கின்ற ஒருவராக, ஒவ்வொரு குழந்தையும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்பொழுது இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.

எனவே, எல்லா சமூகத்தினரையும் ஒன்றுசேர இணைத்து, சேவை செய்யும் இத்தகைய மனித சேவை நிறுவனங்கள் இன்னுமின்னும் உருவாக வேண்டும். இங்கு பாராட்டப்பட்டுப் பரிசு பெறும் 112 முஸ்லிம், தமிழ் மாணவ மாணவியரும் பாகுபாடற்ற விதத்தில் மனிதமுள்ளவர்களாகவும் மனித சமுதாயத்துக்குச் சேவை செய்கின்றவர்களாகவும் உருவாக வேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியுமான ஏ.டபிள்யூ.எம் பவுஸ், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான கே.எம். றிழா, எம்.ஏ.சி. லத்தீப், ஏ.எம். றாசிக் உட்பட ஊர்ப் பிரமுகர்கள் பலரும் ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X