2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலை நாங்கள் தவிர்க்கமுடியாது: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 31 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்    

'தேர்தலை நாங்கள் தவிர்க்கமுடியாது. இதில் எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்' இவ்வாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்புத்தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் ஏற்பாட்டில், பட்டிருப்புத்தொகுதியில் அமையவுள்ள 100 வாக்களிப்பு நிலையங்களுக்கு 100 வாக்களிப்பு முகவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (30) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'தேர்தலை நாங்கள் தவிர்க்கமுடியாது. இதில் எமது மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் இல்லாவிட்டால், இங்கு அபிவிருத்திகள் நடைபெற்றிருக்காது. எனவே, நான் கூறிவருவது என்னவென்றால், வெற்றி பெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது மக்கள் வாக்களிக்கவேண்டும். அரசாங்கத்திலிருந்து யார்தான் வெளியேறினாலும், இந்தத் தேர்தலில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறப்போகின்றார். இதுவே உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய  இந்த இரண்டு கட்சிகளும் எந்தப் பக்கம் போகின்றார்களோ, அந்தப் பக்கம் தோல்வி உறுதி என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் அவர்களுடைய பதவிகளை தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கிறார்களே தவிர, சமூக நோக்கம் அவர்களுக்கு கிடையாது.

கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்  தேர்தலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்  ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதில் ஐ.தே.க.  தலைவர் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியிருந்தன. ஆனால், அந்தத் தேர்தலில்  சரத் பொன்சேகா தோல்வி அடைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்.  மேற்படி   இரண்டு  கட்சிகளும் எதிரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குரிய கட்சியாக, தமிழ் மக்களை நேசிக்கின்ற தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றது என்பதை அறிவித்திருக்கமாட்டார்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்திருப்பவர்கள் யார்? ஹெல உறுமய, ஜே.வி.பி. உள்ளிட்டவர்களே இணைந்துள்ளனர். இப்படிப்பட்டவர்களே பொது எதிரணியில் இருக்கின்றார்கள். இந்த நிலையில், இவர்களுடன் கைகோர்த்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதுதான் வேடிக்கையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்களின் பிள்ளைகள் அல்லது உறவினர்கள் யாராவது யுத்தத்தில் இறந்துள்ளார்களா? இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைவரினதும் பிள்ளைகள் மற்றும் அவர்களது உறவினர்கள்  வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருகின்றார்கள்.  இதுதான் உண்மை. எனவே,  இந்த வருடத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டக்களப்பிலிருந்து தூக்கி எறியவேண்டும்,

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  மட்டும்தான் தமிழ் பேசிய ஜனாதிபதியாவார். இந்நிலையில் தற்போதைய அமைதியான சூழலில் அபிவிருத்திகள் பல நடைபெற்றுவருகின்றன. எனவே, நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போகின்றவர் எமது  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷதான். இந்த வெற்றியில் எமது  தமிழ் மக்களும் பங்கெடுக்கவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X