2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்திகள் குறைவு: ஹிஸ்புல்லா

Sudharshini   / 2015 ஜனவரி 05 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இருப்பதனால் அவர்கள் வாழும் பிரதேசங்களில் அதிகளவு அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதைகளைக் கேட்டுக்கொண்டு எதிர்த்தரப்புக்கு வாக்களிப்பதனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடைபெறுவது குறைவாக இருக்கின்றதென பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேசத்துக்குட்பட்ட, சுயதொழிலை மேற்கொண்டுவரும் 40 பயனாளிகளுக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான காசோலைகளை ஞாயிற்றுக்கிழமை (04) வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் பிரதேச அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது. அத்தோடு மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுயதொழில் வாய்ப்புக்கான வசதிகளை ஏற்பாடு செய்திருக்கின்றது.

இந்த வருடத்திலிருந்து எதிர்வரும் 3 ஆண்டுகளிலே ஒவ்வொரு குடும்பமும் எந்த தொழிலில் ஈடுபடுகின்றார்களோ அந்த தொழிலின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் மட்டக்களப்பு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இங்கு 35,000 பேர் வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான விதவைகள் இருக்கின்றார்கள். எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாக இருந்தால் தீர்வைத் தரக்கூடியவர்களோடு நாங்கள் சேர வேண்டும். இதில் நாங்கள் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் 03 ஆண்டுகளில் ஜனாதிபதி, நாட்டில் 05 இலட்சம் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். நமது மாவட்டத்துக்;கும் அதிகளவு வீடுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாக இருந்தால் நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாருக்காவது வாக்களிக்கலாம். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் மட்டும் வாக்களித்து வெற்றியைத் தீர்மானிப்பது அல்ல. முழு நாட்டு மக்களின் வாக்குகளையும் வைத்து வெற்றியைத் தீர்மானிப்பதாகும்.

ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைந்து மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். அதுபோல் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பலர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களித்தும் சரத் பொன்சேகா படுதோல்வியடைந்து 19 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.

இந்த தடவை மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவும் பிரதான வேட்பாளர்களாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். வழக்கம் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றார்கள். ஆனால் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அவர் வெற்றியை கனவிலும் நினைக்க முடியாது. மாறாக 9ஆம் திகதி இலட்சக்கணகான வாக்குகளைப் பெற்று மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதியாக வெற்றி பெறுவார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவருடைய சொந்தப் பிரச்சினையின் காரணமாகத்தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார். எந்த விதமான பொதுப் பிரச்சினைகளும் அவருக்கு கிடையாது. எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும். ஜனாதிபதியின் வெற்றியில் நாங்களும் பங்காளர்களாக மாறவேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.  

இந்நிகழ்வின் போது தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு 25 கதிரைகளும் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கொட்டகை ஒன்றும் பிரதி அமைச்சரினால் வழங்கப்பட்டன.

தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.சோதிநாதன் தலைமையில், களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கின் இராமாணிக்கம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X