2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை கடதாசி ஆலையை இலாபகரமாக இயங்கவைப்போம்: ரிஷாத்

Gavitha   / 2015 ஜனவரி 31 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது, வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் கட்டடங்கள் உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த இரும்புகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளது.

அதற்கு தனது அமைச்சின் உயர் அதிகாரிகளைக் கொண்ட விசாரணை குழு ஒன்று ஒரு வாரத்துக்குள்; நியமிக்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு சனிக்கிழமை (31) பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளின் பெயரில் விஜயம் செய்த அமைச்சர், கடதாசி ஆலையை பார்வையிட்டதுடன் ஆலை ஊழியர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
 
மிகவும் பிரபல்யமாக விளங்கிய வாழைச்சேனை கடதாசி ஆலையை இந்தளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்வதற்கும் இங்குள்ள சொத்துக்களை களவெடுப்பதற்கும் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்களோ, அவருக்கு நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுத்து அதற்குரிய தண்டணையை பெற்றுக் கொடுப்பேன்

அரச சொத்து இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிற்சாலை, நான்காயிரம் ஐயாயிரம் பேர் தொழில் செய்யும் தொழிற்சாலை, இதை பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களாலேயே இந்த ஆலை நாசமாக்கப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் கவலையாகவுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களை இல்லாமல் செய்வதற்காகத்தான், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.  மைத்திரிபால சிறிசேனா ஒரு நேர்மையான ஜனாதிபதி நல்லாட்சியை கொண்டு வருவதற்காக வந்துள்ளார்;. அவருடைய அரசாங்கத்தில் இதற்குரிய பொறுப்பை எனக்கு தந்துள்ளார். எனவே இது என்னுடைய அமைச்சுக்கு கீழ் வந்துள்ளது. இதனை எவ்வாறு இலாபகரமாக இயங்க வைக்கலாம், எவ்வாறு தொழிலாளர்களுக்கு இலாபம் வழங்கி, எவ்வாறு சந்தோசப்படுத்தலாம் என்ற விடயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.
 
பிரதி அமைச்சர் அமீர் அலி இந்த ஆலையைப் பற்றி அடிக்கடி என்னிடம் கவலைப்படுவார். தொழிற்சாலையை முன்னேற்ற வேண்டும்,  இலாபகரமாக இயங்க வைக்க வேண்டும், தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும் என விடயத்தில் மிகவும் அக்கறையாக உள்ளார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமைபுரிந்த பொறியியலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் எல்லோருக்கும் நான் தற்போது அழைப்பு விடுக்கின்றேன். ஆலையின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு  தற்காலிகமாக வந்து இந்த தொழிற்சாலையை எவ்வாறு மீளக் கட்டியமைக்கலாம், இதை எவ்வாறு முன்னேற்றலாம் இதற்கு நாங்கள் என்ன என்ன விடயங்கள் செய்ய வேண்டும் என்று தங்களுடைய  ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .