2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதிய ஆட்சியும் எங்களை புறக்கணித்துள்ளது: யோகேஸ்வரன்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

புதிய அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவை வழங்கியும் கூட, எங்களை புறக்கணித்துள்ளார்கள் என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற வருடாந்த திறன் விருத்தி செயற்பாட்டு விருது வழங்கும் நிகழ்வில்; உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யுத்த சூழல் காரணமாக  இந்த மண்ணில் பலவற்றை நாங்கள் இழந்துள்ளோம்.  கல்வி மட்டும் எம்மிடமிருந்து பறிக்கப்படவில்லை. அம்பாறையுடன் மட்டக்களப்பு இணைந்திருந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்கியது என்பதற்கு சுவாமி விபுலானந்தரே சிறந்த சான்று. இப்பொழுது கல்வி நிலையில் பல இன்னல்களை அனுபவிக்கின்றோம்.

அரசியல் சூழல் தற்போது மாறினாலும்,  தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் இன்னும் மாறியதாக இல்லை.
கடந்த காலத்தில் பாடசாலைகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை இராமகிருஷ்ண வித்தியாலயம் இன்றும் கூட இராணுவ முகாமாகவே உள்ளது.

தற்போது மாறியிருக்கும் ஆட்சியை நன்கு பயன்படுத்தி எங்களது கல்வி நிலையை மேம்படுத்தக்கூடிய வகையில் பாடசாலை கல்விக்கான வளங்களை தேடவேண்டும்.

யுத்தத்துக்கு முன்னரும்; யுத்தத்தின்போதும் யுத்தம் முடிவடைந்து ஆட்சி மாற்றம் வந்த பின்னரும் தமிழ் மக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.கிழக்கு மாகாண ஆட்சியாளர்களால் நியமனங்களில் நாங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டோம். ஆனால், நாங்கள் ஆட்சி நடத்தினால் அவ்வாறு செய்யமாட்டோம்.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் தனித்து நின்று பலமான ஆட்சி அமைப்பதற்கு மக்கள் போதுமான ஆதரவு தராத காரணத்தால், நாங்கள் மற்றவர்களிடம் கெஞ்சவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நியாயம்வேண்டும் என்று போராடிய இனம் நாங்கள்;. இந்த நாட்டில் தமிழ்மொழி நீதிமன்றம் உட்பட சகல இடங்களிலும் அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்று சத்தியாக்கிரகம் செய்தவர்களும் நாங்கள்;.  இப்பொழுதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் உரிமை வேண்டுமென்று போராடி வருபவர்களும் நாங்கள்;.

மாகாணசபை ஆட்சிமுறை கூட எமக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால், அதைத் தெளிவாக அனுபவிக்க முடியாதவர்களாக நாம் இருக்கின்றோம். கூடிய ஆசனங்களை கொண்ட கிழக்கு மாகாணசபையில் தமிழர்களுக்கான முதலமைச்சர் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு நியாயமானது என்றால், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் மக்களுக்கு தந்திருக்கவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X