Gavitha / 2015 பெப்ரவரி 21 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
கிழக்கு மாகாணத்தில் இணக்க அரசியலை சிறப்பாக மேற்கொண்டு தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டிய பெருமை எம்மையே சாரும். எதிர்ப்பு அரசியலே தமிழர்களின் பாதை என்பதனை மாற்றி சுய கௌரவத்துடன் இணக்க அரசியலும் செய்யலாம் என்று கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்களுடனான 2015ஆம் வருடத்துக்கான கட்சியின் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான நிதி நிருவாக சமத்துவத்தினை பேணிப்பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதனை ஏனைய அரசியல் தலைமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எடுத்துக்காட்டியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினையே சாரும்.
கடந்த 2008இல் கிழக்கு மாகாணசபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொறுப்பேற்று இணக்க அரசியல் மேற்கொள்ள முற்பட்டபோது பலர் தூற்ற முற்பட்டார்கள். எமக்கான பாதை இதுவல்ல துரோகத்தனமான பொம்மை மாகாணசபையினை பொறுப்பேற்கின்றார்கள், என்ன செய்யப் போகின்றார்கள், என்றெல்லாம் பல அவதூறுகள் எம் மீது வீசப்பட்ட போது, மிக நிதானமாக முடிவெடுத்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதன் தலைவர் சி.சந்திரகாந்தனும் நான்கு வருடங்கள் கிழக்கு மாகாணத்தின் மக்களின் சமத்துவமான இன ஐக்கியத்துடன் எவ்வாறு மாகாணத்தினை நெறிப்படுத்திக் காட்டினார் என்றால் அதற்கு மக்களே சாட்சி கூறுவார்கள்.
பின்னர் கிழக்கு தமிழர்கள் சுய கௌரவத்துடனான இணக்க அரசியலினை ஆரம்பித்தார்கள். நாம் அந்த வகையில் திருப்தி அடைகின்றோம். காலம் காலமாக எதிர்ப்பு அரசியல் செய்த தமிழ் தலைவர்களும் இணக்க அரசியலின் தேவையினை உணர்ந்து இருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றும்.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் கோரியதும் பின்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் தர மறுத்ததை தொடர்ந்து, ஏதாவது இரு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க இணக்கம் தெரிவித்து, அதற்கான முஸ்தீபுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த 2008இல் எடுத்த தீர்க்க தரிசனமான அரசியல் பாதை வெற்றியடைந்துள்ளதனை புலப்படுத்தி நிற்கின்றது.
நாம் அன்று எடுத்த முடிவு இன்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. எதிர்ப்பு அரசியலையே தேர்ச்சி பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இன்று கிழக்கு மாகாணசபையில் எந்த அமைச்சை எடுக்கலாம் எவ்வாறு ஏனைய ஆளும் கட்சிகளுடன் இணைந்து இணக்க அரசியலை மேற்கொள்ளலாம் என கூட்டங்கள் தீர்மானிக்கும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்டிய வழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் பயனளிப்பதன் மூலம் பல எதிர்ப்புடன் இருக்கும் மக்களுக்கு தேவைகள் பூர்த்தி செய்யப்படுமானால் நாம் அதனை வரவேற்போம், எந்தக் கட்சியானலும் சரி எந்தத் தலைமையானாலும் சரி, எம் கிழக்கு மாகாணத் தமிழ் சமூகத்தின் உணர்வுகளை மதிப்பதுடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பாடுபடும் பட்சத்தில் நாம் பெருமனதுடன் வழிவிட்டுக் கொடுக்க எப்போதும் தயக்கம் காட்டப் போவதில்லை.
எமது சமூகம் யாரிடமும் மண்டியிடாத நிருவாக அரசியல் அதிகாரத்துடன் இன ஐக்கியத்துடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே இன்றைய தேவை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago