2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அத்துமீறிய குடியேற்றங்களை தடுக்கவும்: துரைரெட்னம்

Gavitha   / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை, மீளகுடியேற்றவும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய குடியேற்றங்களை தடுக்குமாறும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புணாணை பகுதிக்கு திங்கட்கிழமை (16) விஜயம் செய்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியதுடன் அப்பகுதியையும் பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகார அமைச்சர் சுவாமிநாதனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலகப்பிரிவு புணாணை கிழக்கு 211வி கிராமசேவையாளர் பிரிவில் உள்ள புணாணை கிராமம் 1990.06.10ஆம் திகதி எற்பட்ட யுத்தம் காரணமாக இக்கிராமத்தை சுற்றிவளைத்து பலாத்காரமாக அண்ணளவாக 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அவர்களின் அனுமதியின்றி எழுப்பப்பட்டு, அந்த இடத்தில் இராணுவம் நிரந்தரமாக இராணுவமுகாம் அமைத்துக் கொண்டனர்.

இவ்விடத்தில் இலங்கை இராணுவமும் விசேட அதிரடிப்படையினரும் காவல்துறைபிரிவும் இன்று வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கிராமத்தில் இருந்த 30 வீடுகளுக்கு மேல் பாதுகாப்பு அரண் அமைப்பதற்காக அகற்றப்பட்டு, முகாமாக மாற்றப்பட்டு பாதுகாப்பு மண்மேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினரிடம் உரிய இடங்களைக் கேட்டு மீள ஒப்படைக்குமாறு கோரியபோது, 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை மீள ஒப்படைக்கப்படவில்லை.

எனவே, இவர்களுக்கான சொந்த இடங்களை மீளக்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
30 குடும்பங்கள் இடம்பெயர்ந்த போதிலும் குடும்பங்கள் பெருக்கத்துக்கு ஏற்ப தற்போது 72 குடும்பங்கள் தற்காலிக இடங்களிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் 03-02-2014 அன்று மீள்குடியேற்ற அமைச்சினால் மீள குடியமர்த்தப்பட்டு, அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்து அவர்களை மீள குடியமர்த்த நடவடிக்கையெடுக்கவும்.

1.    தற்பொழுது இராணுவமுகாம் உள்ள இடம் பொதுமக்கள் வசித்து வந்த மேட்டு நிலப்பகுதியாகும். நிலத்தினை மக்களிடம் வழங்குதல்
2.    தற்சமயம் தற்காலிக கொட்டில் அமைக்கப்பட்ட இடம் தாழ்வான பிரதேசமானதால் இவ்விடத்தை வோளண்மை செய்ய 2 ஏக்கர் வீதம் காணிகளை வழங்குதல்
3.    சேதமாக்கப்பட்ட உடமைகளுக்கு நஷ்டஈடு வழங்குதல்.
4.    நிரந்தர வீட்டு வசதிகளை பெற்றுக்கொடுத்தல்.
5.    எல்லைப்பகுதியில் யானை வேலிகளை அமைத்தல்
6.    குடிநீர், கிணறுகள் அமைத்துக் கொடுத்தல்.
7.    சுற்றுவேலிக்கான முட்கம்பி, கொங்கிறீட் தூண், வீதி, சுகாதார, மின்சாரவசதி போன்றவைகள் அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
8.    பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மண்மேடுகளை அகற்றுதல்.
9.    ஆறு மாதங்களுக்கான உலர் உணவு வழங்கப்பட வேண்டும்
10.    விவசாய நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

இப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இந்து ஆலய காணிக்குள் விகாரை அமைத்து சிங்கள குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அத்து மீறிய நடவடிக்கையாகும்.

கடந்த இரண்டு வருடமாக இந்த அத்து மீறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. இது தொடர்பில் அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அத்து மீறியகாணி அபகரிப்புக்கு கடந்த காலத்தில் ஆளும் கட்சியில் உள்ளவர்களும் ஆதரவளித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X