Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாhணசபையின் தேசிய அரசில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புறந்தள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது என்று அம்மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
'கிழக்கு மாகாணசபையில் தேசிய அரசு அமைப்பு என்ற போர்வையில், மாகாணசபையின் முன்னைய ஆட்சியில் பங்காளிக்கட்சிகளாக இருந்த கட்சிகளை புறந்தள்ளுகின்ற நிலைமை அவதானிக்கப்படுகின்றது. இது கிழக்கு மாகாணசபையின் நீடித்த ஆட்சிக்கு ஆரோக்கியமானதாக இருக்கப்போவதில்லை.
கிழக்கு மாகாணசபையின் கடந்த ஆட்சியில் பங்காளியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இருந்தது. தற்போதைய மத்திய அரசின் மாற்றத்திலும் எமது கட்சி பெரும் பங்களிப்பு செய்துள்ளது. அதன் பயனாக இப்பொழுது கிழக்கு மாகாணசபையில்; தேசிய நல்லிணக்க அரசாட்சிக்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆயினும், நாட்டினதும் மாகாணசபையினதும் நல்லாட்சிக்காக உழைத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸை புறந்தள்ளிவிட்டு, கிழக்கு மாகாணசபையில் தேசிய அரசு என்ற போர்வையில் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்க எத்தனிப்பது விசனத்துக்குரியது.
எமது கட்சியை புறக்கணிப்பதான இந்த நிலைமை கிழக்கு மாகாணசபையின் புதிய ஆட்சியில் தொடருமாக இருந்தால், வரப்போகும் இந்த புதிய ஆட்சியின் ஆயுட்காலம் விரல்விட்டு எண்ணக்கூடியதாக இருக்கும்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கப்போகின்ற பொறுப்புவாய்ந்த சூழ்நிலையில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதன் அர்ப்பணிப்பையும் நல்லெண்ணத்தையும் தொடக்க காலத்திலேயே வெளிக்காட்டவேண்டும். அரசாங்கமும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். கிழக்கு மாகாணசபையில் முன்னைய ஆட்சியில் பங்களிப்பு செலுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் புறந்தள்ளாது, அதையும் இணைத்து நல்லிணக்க தேசிய அரசை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தவேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் தலைமையிலான கிழக்கு மாகாணசபையின் தேசிய நல்லிணக்க அரசாட்சியில், ஏனைய கட்சி உறுப்பினர்களை பழிவாங்காமலும் இதயசுத்தியோடு நடந்துகொள்வது முக்கியமானது. ஏனைய கட்சிகளுக்கு ஆதரவான அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் பழிவாங்கப்படுவதையோ, இடமாற்றம் செய்யப்படுவதையோ முன்னிலைப்படுத்தாமல், மாகாணத்தின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்து செயற்படவேண்டும். முதலமைச்சரின் பங்கும் பணியும் இந்த விடயத்தில் இன்றியமையாதது ' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .