2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'மத்திய மாகாண அரசுகளின் உறவை மீளமைப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டவாறு மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு வளங்களின் பாய்ச்சலை நிச்சயப்படுத்துகின்ற பொறிமுறையொன்றை நிறுவுவதற்கும் மத்திய மாகாண அரசுகளின் உறவை மீளமைப்பதற்குமாக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நாம் வெகுவாக பாராட்டுகின்றோம்;' இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம் மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் திங்கட்கிழமை (23)  கிழக்கு மாகாணசபையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்றைய அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டத்துக்கு முதற்தடவையாக பொதுநிர்வாக, புத்தசாசன, நல்லாட்சி மற்றும் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கருஜயசூரிய வருகைதந்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'அதிகாரப்பகிர்வு, அதிகாரத்தை பங்கிடுவதற்கான மிக முக்கியமான ஆட்சிப் பொறிமுறையாக (ஆளுகைப் பொறிமுறையாக) 13ஆவது அரசியல் திருத்தம் மிகப் பரவலாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்தை தழுவி தனது பங்கை ஆற்றுகையில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அனைத்து வளங்களையும் தற்போது கிழக்கு மாகாணம் தன்னகத்தே கொண்டுள்ளது.

20 வருடங்களுக்கு பிறகு 2008ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு மாகாணத்துக்கான  மாகாணசபை தாபிக்கப்பட்டதன் பின்னர், பல உட்கட்டுமான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் சிறந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் மற்றும் இவைகளுக்கான வேலைவாய்ப்பை  உருவாக்கும் நோக்கில் முற்படுத்தப்பட்ட கிழக்கின் எழுச்சி மற்றும் ஏனைய அபிவிருத்தி முன்னெடுப்புகள் நியாயமான வகையில் வெற்றி கண்டுள்ளது. இவை அனைத்தும் பாராட்டத்தக்க அபிவிருத்திகளாகும்.

அபிவிருத்தியின் அத்தியாவசியத்தன்மையை கருத்திற்கொண்டு நான் அமைச்சரிடம் கேட்டுக்கொள்வது யாதெனில், மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே எவ்வாறு மென்மேலும் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை மீண்டும் ஒரு தடவை நன்கு ஆராயவேண்டும் என்பதாகும்.

அபிவிருத்தி சவால்களையும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகளையும் பரந்த நோக்கில் ஆராய்வதற்கான காலம் தற்போது மலர்ந்துள்ளது.  நாம் ஒவ்வொருவரும் குறுகிய அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவினைகளிலிருந்து விடுபட்டு தேசிய நலனுக்காக செயலாற்றி இப்பிரச்சினைகளுக்கான அணுகுமுறையில் முற்றுமுழுதாக இலக்கு நோக்கியவர்களாக இருக்கவேண்டும்.

இத்தகைய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான வினைத்திறன் மிக்க வழிகளையும் உபாயங்களையும் கண்டுபிடிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகப்பிரிவுகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும் என்று வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.

மத்திய அரசாங்கத்தையும் மாகாணசபையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மாவட்ட செயலாளர்களும் பிரதேச செயலாளர்களும் இரட்டை வகிபங்கை  ஆற்றுகின்றனர். எனவே, மத்திய அரசுக்கும் மாகாணசபைகளுக்குமிடையே அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில் அவர்களின் ஒத்துழைப்பு மிக இன்றியமையாததாகும்.

ஜனாதிபதியின் நல்லாட்சியை அடித்தளமாகக் கொண்ட ஜனநாயக கட்டமைப்பு என்ற தூரநோக்குக்கு நாம் முழுமையான ஆதரவை  தெரிவிக்கின்றோம். இதன் மூலம் மாகாணங்கள் புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி அபிலாஷைகளை அடையும் வகையில் சக்திப்படுத்தப்படும் என்பது எமது நம்பிக்கையாகும்.

இது அனைத்து மாகாணங்களையும் தத்தமது வளங்களை பயனுறுதி வாய்ந்த வகையில் பிரயோகித்து இலங்கையை உலக அரங்கில் தனக்கே உரித்தான இடத்தை  நோக்கி நகர்த்தக்கூடிய வகையில் இயலுமையுள்ளதாகவும் மாற்றக்கூடியது' என்றார்.

இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், தவிசாளர், கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள், பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X