2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மாகாண அமைச்சு பதவிகளை கூட எடுக்கின்ற நிலைமையை காண்கின்றோம்: யோகேஸ்வரன்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 02 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்து செயற்பட விரும்பிய முஸ்லிம் காங்கிரஸ், முன்பிருந்த அரசாங்கத்தின் தொடர்பை வைத்துக்கொண்டு எங்களுக்கு ஆரோக்கியமாக தரப்படக்கூடிய மாகாண அமைச்சு பதவிகளைக் கூட எடுக்கின்ற நிலைமையை காண்கின்றோம்' இவ்வாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையின் முப்பெரும் விழா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எங்களுக்கு மத்தியில் மைத்திரி ஆட்சி, மாகாணத்தில் மஹிந்தவின் ஆட்சி என்ற நிலைமை இப்போது தோன்றியுள்ளது.  பொருத்தமற்ற விதத்தில் எங்களுக்கு இரண்டு அமைச்சுக்களை வழங்கலாம் என்று எண்ணுகின்றனர். காணி, கல்வி சார்ந்த அமைச்சு எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும். இந்த மாகாணத்தில் நாங்கள் நாற்பது சதவீதம் பெரும்பான்மை இனமாக இருக்கின்றோம். கல்வி அமைச்சை வைத்திருப்பவர் ஒரு கல்விமானாக இருக்கவேண்டும். ஆனால், இன்று அந்த நிலை மாகாணத்தில் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்வி அமைச்சையோ, பண்பாட்டு அமைச்சையோ வழங்குவதென்றால் ஒரு பண்பாளரிடம் ஒரு கல்விமானிடமே வழங்கும். வடமாகாணத்தில் ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வழங்கியிருக்கின்றோம். இங்கு நாங்கள் கல்வி அமைச்சை ஒரு கல்வி அமைச்சின் உதவிச் செயலாளருக்கு வழங்க தீர்மானித்திருந்தோம். ஆனால், இன்று அது வேறு ஒரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் தற்போதைய அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்பதற்காக பாடுபட்ட வடக்கு, கிழக்கு மக்களின் அதிக பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம், ஏன் கிழக்கு மாகாணசபையில் 11 ஆசனங்களை வைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியை வழங்குங்கள் என்று தன்னுடன் இணைந்துள்ள கட்சிகளுக்கு கூறவில்லை.

இந்த அரசாங்கத்தினால் அதனைச் செய்யமுடியும். அதனை செய்யாமல் முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டாலும், காணி, கல்வி அமைச்சையாவது தமிழ் மக்களுக்கு வழங்காமல் பொருத்தமற்ற அமைச்சுகளை வழங்கமுனைவது எந்தவிதத்தில் நியாயம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X