2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணசபையை வைத்து ஒரு சில அரசியல் கட்சிகள் வியாபாரம் செய்கின்றன: சுபைர்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 03 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபையை வைத்து ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் வியாபாரம் செய்கின்றன என்று  கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

பெண்களுக்கான தைய்யல் பயிற்சி நிலையத்தை ஏறாவூரில் திங்கட்கிழமை (2)  திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'கிழக்கு மாகாணசபை ஸ்திரமற்ற நிலைக்கு வந்துள்ளதால், அதை கலைக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதை அடுத்து,  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியும் ஓர் அமைச்சுப் பதவியையும்  முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்வது என்றும் ஏனைய மாகாண அமைச்சுப் பதவிகளை  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுக்கு வழங்குவது என்றும்  தீர்மானிக்கப்பட்டு  ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த ஒப்பந்தத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்துகொண்டது.

இதை அறிந்து இந்த நடவடிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தேகத்துடன் நான் பார்த்தது இன்று உறுதியாகியுள்ளது.    இன்று முதலமைச்சருக்கு ஆதரவாக கையொப்பம் இட்ட உறுப்பினர்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்;கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் தேசிய காங்கிரஸையும் பழிவாங்கும் குரோத அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது.

பணப்பரிமாறல்கள் மற்றும் பேரம் பேசல்கள் கிழக்கு மாகாணசபையின் விடயத்தில் நடைபெற்றுள்ளமையை  அவதானிக்கமுடிகின்றது.

தமிழ், முஸ்லிம் இன விரிசலை ஏற்படுத்தி தற்போதும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் தமது கட்சிகளின் அரசியல் இருப்புக்களை தக்கவைப்பதற்கான முயற்சிகளே நடைபெற்றுவருகின்றன. இவ்வாறான போக்கை அரசியல் கட்சிகள் கைவிட்டு, கிழக்கு மாகாணசபையின் மிகுதியாகவுள்ள இரண்டு வருடங்களிலும் மாகாண மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை முன்னெடுத்;துச் செல்லவேண்டும்.

புதிய ஜனாதிபதியின் தயவில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து பணியாற்றவேண்டும். இதற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுப்புடன் செயற்பட ஆயத்தமாக உள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X