Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 09 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
நூறு நாள் வேலைத்திட்டத்தில் அறுபது நாட்களை கடந்துள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தக் கோரிக்கையையும் இந்த அரசாங்கம் உள்வாங்கி செயற்படுத்தவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அத்துடன், சிறையில் உள்ள ஒரு தமிழ் அரசியல் கைதியையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத நிலையே உள்ளதாகவும் அவர் கூறினார்.
பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர், 40ஆம் வட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தால், பல மாற்றங்கள் வரும் என்று கூறினார்கள். இந்த நிலையில், அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அறுபது நாட்கள் சென்றுள்ளன. மீதி இருப்பது நாற்பது நாட்களாகும்.
இந்த அறுபது நாட்களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்றால், எதுவும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று வடமாகாண ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார். வடக்கு முதலமைச்சரின் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் மாற்றப்பட்டுள்ளார். வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன், இந்த அறுபது நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு மட்டும் கிடைத்துள்ளது. இது அறுபது நாட்களில் நாங்கள் கண்டுள்ள விடயம். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊழல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இந்த அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால், விசாரணை நடத்தப்பட்டு எவரும் தண்டிக்கப்பட்டதான தகவல்கள் இல்லை.
நாங்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெற்றி பெற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தையோ, தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்களையோ செய்வதற்கு இன்னும் தயாரில்லை. அவ்வாறே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உள்ளார். இவர்கள் எதிர்வரும் தேர்தல்களில் தாங்கள் வெல்லவேண்டும் என்ற ரீதியில் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை விடுத்தபோதிலும், அவை தொடர்பில் கவனம் செலுத்தாமல் அவர்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தமிழர்கள் இருக்கின்றார்கள். இரண்டாவது இடத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். ஆனால், பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் தொகையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் உள்ளனர். இரண்டாம் நிலையிலேயே தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையுள்ளது.
தமிழ் மாணவர்கள் ஏன் குறைந்துள்ளார்கள்? தமிழ் மாணவர்கள் பாடசாலை செல்வதில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எங்கள் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது சமூகம் சிந்திக்கவேண்டும்.
இனத்தை பாதுகாக்கவேண்டும், மண்ணை பாதுகாக்கவேண்டும் என்றால் எங்கள் இனத்தை பெருக்கவேண்டும்.
கிழக்கு மாகாணசபையில் 6,450 வாக்குகளை அளித்திருந்தால், இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கையேந்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. ஏழு ஆசனங்கள் கொண்ட முஸ்லிம் காங்கிரஸிடம் 11 ஆசனங்களைக் கொண்ட நீங்கள் ஏன் போனீர்கள் என்று கேட்கின்றனர். கிழக்கு மாகாணசபையில் இருக்கும் 37 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்கள் முஸ்லிம்கள். 13 உறுப்பினர்கள் தமிழர்கள். 09 உறுப்பினர்கள் சிங்களவர்கள். கட்சி ரீதியாக நாங்கள் 11 பேர் இருந்தாலும், இன ரீதியாக அவர்கள் 15 பேர் உள்ளனர். இந்த அரசியலை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த அரசியலில் மாற்றம் வரவேண்டும். இந்த மாற்றம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதன் ஊடாக வரும் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
45 minute ago
49 minute ago
3 hours ago