2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு பங்கிடப்படுகின்றது: ரொபட் நிக்ஸன்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

தமிழர்கள் அதிகளவு வாழும் வாகரைப் பிரதேசத்தில் சுமார் 2,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிங்களுக்கு நிலங்கள் பங்கிடப்படுவதாகவும் இதன் பின்னணியில் சமுர்த்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சர் அமீர் அலி செயல்படுவதாகவும் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் ரொபட் நிக்ஸன் குற்றஞ்சாட்டினார்.

காடுகள் அழிக்கப்பட்டுவது சம்பந்தமாக சட்டத்துக்கு முரணான காணி அபகரிப்பைக் கண்டிக்கின்றோம் எனும் தலைப்பில் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வியாழக்கிழமை (23), மட்டக்களப்பு மாநகர வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒன்றியத்தின் தலைவர் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்,

புணாணை கிழக்கு காரைநகர், கிரிமிச்சை, மதுரங்குளம், மாங்கேணி, காயாங்கேணி, ஆலங்குளம் அண்டிய பகுதிகளிலே காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் பங்கிடப்படுகின்றன. கடந்த 20 நாட்களாக இது இடம்பெறுவதாகவும் தங்களுக்கு கடந்த 20ஆம் திகதியே தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.

இதற்குக் காரணம் மக்கள் பயணிக்கும் வீதிகளை அண்டிய பகுதிகளில் காடுகள் அழிக்கப்படாமல் வீதிக்கு தொலைவில் உள்ள காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு காணிகள் பிடிக்கப்படுவதனால் உடன் தெரியவில்லை எனத் தெரிவித்தவர்கள் அதற்கு ஆதாரமாகப் குறித்த பிரதேசங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காண்பித்தனர். 

காணிகளை மக்கள் பெறும்போது அரச அதிகாரிகளால் தடை ஏற்படுகின்றது. அரசியல் வாதிகள் முன்னின்று இதைச் செய்வதனால் அரச அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை இதுதானா அரசின் நல்லாட்சி எனக் கேள்வி எழுப்பினர்.

பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய குறித்த பிரதேசங்களில் சேனைப்பயிர் செய்தல், பாரம்பரிய வழிபாட்டு முறையான தீமித்தலுக்கான விறகுகளைப் பெறமுடியாமல் உள்ளபோது அரசியல் வாதிகளின் தலையீட்டினால் முஸ்லிம் மக்கள் குறித்த காடுகளை அழித்து கொட்டகைகள், குடியிருப்பகள், வழிபாட்டுப் பள்ளி வாசல் என்பன அமைக்கப்பட்டு வருகின்றன இந்த செயற்பாடு, இனங்களிடையே எதிர்காலத்தில் விரிசல் மற்றும் முறுகலை ஏற்படுத்தும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 45,000 பேர் காணி அற்ற நிலையில் உள்ளபோது வாகரைப் பிரதேசத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 30 சதவீதமான மக்களுக்கே காணி வழங்கப்பட்டுள்ளன ஏனையவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. 

சட்டவிரோதமாகக் காடுகளை அழித்து காணிகளைப் பெறுவது குற்றம் என எமக்கு அறிவுறுத்தப்பட்டு எமது கைகள் கட்டப்பட்டள்ள நிலையில் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் பின்னணியிலிருந்து இச்செயல்கள் நடைபெறுமாக இருந்தால் நாங்கள் பிரதேச மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வாகரை பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் உப-செயலாளர் வி.பிரபா, உப தலைவர் என். இராசலிங்கம், பொருளாளர் பி. கமலாதேவி மற்றும் ஜெ. ஜெயாலினி ஆகியோரும்  கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X