Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 11 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
உள்ளூராட்சிசபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் 15ஆம் திகதி வறிதாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபையின் இறுதி அமர்வு, நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீமின் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில் திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இதன்போது அங்கு எதிரும் புதிருமான வாதம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் நகரசபையின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், உள்ளூராட்சிசபைகளின் பதவிக்காலம் மேலும் 45 தினங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மே 15ஆம் திகதியுடன் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவடைகின்றது.
இதன்போது, நகரசபையின் இறுதி அமர்வை ஆரம்பித்துவைத்து நகரபிதா எம்.ஐ.எம்.தஸ்லீம் உரையாற்றினார். இங்கு உரையாற்றிய அவர், 'முன்னாள் தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவின் தலைமையின் கீழ், ஏறாவூர் நகரசபைப் பிரதேசம் வினைத்திறன் மிக்கதாக பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது.
நான் அரசியலுக்கு வந்தமை, நகரபிதாவாகியமை கனவு மாதிரி நடந்துள்ளது. ஏனெனில், எனக்கு முன் அரசியல் அனுபவமில்லை, அரசியலில் ஆர்வமுமில்லை. நான் ஒரு வணிகன் என்ற ரீதியில் வர்த்தகத்திலேயே எனது ஈடுபாடு இருக்கும் என்பது வாஸ்தவம். அதேவேளை அரசியலுக்குள் நுழைந்தால் பகைவர்களை தேடவேண்டி ஏற்படும் என்பதும் எனது அச்சத்துக்கு காரணம்.
என்றாலும், எவ்வாறோ நான் ஏறாவூர் நகரசபையின் நகரபிதாவாக ஒன்றரை மாதங்கள் கடமையாற்றியுள்ளேன். எனது பதவிக்காலத்தில் எனது தலைமையின் கீழ் அரசியல் ரீதியாக ஏதாவது தவறுகள் நடந்திருந்தால், அதற்காக நான் உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்' என்றார்.
இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரும் பிரதித் தவிசாளருமான எம்.எல்.றெபுபாசம் உரையாற்றியபோது, 'முன்னாள் தவிசாளர் அலிஸாஹிர் மௌலானா இந்த ஊரின் அபிவிருத்தியில் காத்திரமான பங்கெடுத்தவர். அதேபோன்று, அபிவிருத்திக்காக தன்னை அர்ப்பணித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் ஏறாவூர் நகரசபை எளிதில் மறக்கமுடியாது. எமது ஊர் மட்டுமல்ல, முழு நாடுமே அவரால் அபிவிருத்தி கண்டது' என்றார்.
இதை மறுதலித்துப் பேசிய நகரசபை உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத், அபிவிருத்தி என்ற மாயைக்கு பின்னால் இருந்த ஊழல்களையும் அராஜகங்களையும் எம்மால் எளிதில் மறக்கமுடியாது. இந்த விடயங்கள் ஏறாவூர் நகரசபையிலும் தலைவிரித்தாடியது. அபிவிருத்தி என்ற பெயரில் ஊழல்கள் உச்சத்துக்கு சென்றன. நாட்டிலும் அவ்வாறே. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோலோச்சிய காலத்தில் அபிவிருத்தி அனைவரது கண்களையும் மறைத்திருக்க அதற்குள்ள ஊழல்களும் அடக்குமுறையும் இனத்துவேஷமும் தாண்டவமாடியது' என்றார்.
இந்த இறுதி அமர்வில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸ் உறுப்பினரான எம்.எஸ்.எம்.நஸீர், சுயேச்சைக்குழு உறுப்பினரான பி.கஜேந்திரகுமார் ஆகியோர் உட்பட நகரசபையின் ஒன்பது உறுப்பினர்களும் பங்குபற்றினர். அத்துடன், நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீமும் பிரசன்னமாகியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago