2025 மே 17, சனிக்கிழமை

அமைதிக்குப் பின் சமூக வாழ்வில் சுமூகம்: கே மிற்செல்

Princiya Dixci   / 2015 மே 12 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாட்டில் அமைதி ஏற்பட்ட பின்னர் உள்நாட்டிலும் அதேபோல் வெளிநாட்டிலும் பல தொழில் வாய்ப்புக்கள். ஏற்பட்டுள்ளதோடு பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளதால் சமூக வாழ்க்கை முறையிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கட்டார் அகடமியின் சிரேஷ்ட பாடசாலை மாணவர் சேவை இணைப்பாளர் கே மிற்செல், செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபையினால் நடத்தப்படும் ஆங்கில பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ஆங்கில டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பிலுள்ள ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபையின் உப தலைவர் கே.எம்.பதுறுஸ்ஸமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய கே மிற்செல் கூறியதாவது,

சமூக வாழ்க்கையிலும் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் இப்பொழுது மாணவர்களும் கற்றலில் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த சமூகத்தை கல்வி அறிவின்பால் இட்டுச் செல்ல வேண்டுமென்பதற்காக முஹம்மத் அன்ஸார், தன்னைத் தியாகம் செய்து உருவாக்கிய ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபையின் பலாபலன்கள் இப்பொழுது வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அதன் வெளிப்பாடுதான் இன்று உங்களில் 36 மாணவர்கள் ஆங்கில கற்கையை நிறைவு செய்து டிப்ளோமா சான்றிதழ் பெறுகின்றீர்கள்.

நான் இந்த கத்தார் அகாடெமியில் இணைந்து பணியாற்றி விட்டு எனது பணிகளை நிறைவு செய்யும் இந்த இறுதி நிகழ்விலே உங்களில் கற்றுத் தேறியவர்களுக்கு டிப்ளோமா பயிற்சிச் சான்றிதழை வழங்கி வைப்பதில் மகிழ்ச்சிடைகின்றேன்.

இந்த அடைவு மட்டத்தை எட்டியதற்காக பெரிய திருப்தி என்னுள் இருக்கிறது. இந்த உலகம் முழுவதும் எமது சமூகத்தின் எதிர்கால தலைவர்கள் உங்களைப் போன்ற இளையவர்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபையினூடாக இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆங்கிலக் கல்வி மற்றும் கணனித் துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதே எமது அவா.

நான் எனது பணிகளை நிறைவு செய்து இங்கிருந்து புறப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த கல்வி அபிவிருத்திச் சபையின் ஸ்தாபகத் தலைவர் அன்ஸாருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அனுபவ அறிவையும் இதர உதவிகளையும் ஏறாவூர் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் செய்யத் தயாராக இருக்கின்றேன்.

நானும் எனது கணவரும் லால் என்ற வியட்நாமியரும் ஏறாவூரைப் போன்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வியட்நாம் கிராமங்களிலுள்ள  மாணவர்களுக்கு 20 வருடங்களாகப் பணியாற்றியதில் வெற்றியும் கண்டிருக்கின்றோம்.

இந்த அனுபவமும் அறிவாற்றலும் இன்னமும் உங்களது சமூகத்திற்குப் பயன்படும்படியாக நான் என்றும் உதவிக் கொண்டிருப்பேன் என்றார்.

இந்நிகழ்வில் கட்டார் அகாடெமியின் தலைமை நிருவாகி லீசா மார்ட்டின், சிரேஷ்ட பாடசாலை மனிதநேய கல்விப் பிரிவு இணைப்பாளர் மாஹா அல்காபி உள்ளிட்ட கட்டார் அகடமியின் பிரதிநிதிகள் 14 பேர், ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சபை உப தலைவர் கே.எம். பதுறுஸ்ஸமான், அதன் நிர்வாக அதிகாரி எம்.எச்.எம். சனூஸ், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நஸீர் உட்பட மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .