2025 மே 17, சனிக்கிழமை

காத்தான்குடி நூதனசாலையிலுள்ள சிலைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

George   / 2015 மே 13 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம். நூர்தீன்

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரும் 'மக்கள் அழுத்தப் போராட்டம்' புதன்கிழமை(13) காலை காத்தான்குடி நகரசபை முன்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்கெனவே ஒரு துண்டுப் பிரசுரத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தது, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதன சாலை இஸ்லாமிய வரையறைகளுக்கு விரோதமான வகையில் அமைக்கப்பட்டுள்ளமை பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்களையும் விசனங்களையும்  தோற்றுவித்துள்ளது. 

இது தொடர்பான கண்டனங்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்றும் வருகின்றன.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, தஃவா அமைப்புக்கள் என்பன, இங்கு வைக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், இஸ்லாத்தில்  இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த நூதனசாலையை அமைப்பதற்கு இடம் மற்றும் அனுமதி என்பனவற்றினை வழங்கிய காத்தான்குடி நகரசபை இது தொடர்பில் பாராமுகமாக செயற்படுவதனையிட்டு நாம் வேதனைப்படுவதோடு, இது தொடர்பாக கடந்த 23.04.2015 அன்று இடம்பெற்ற நகரசபை அமர்வின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (Nகுபுபு) நகரசபைப் பிரதிநிதிகளால் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றக் கோரும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் மேற்படிக் கூட்டத்தில் அப்பிரேரணையை ஏற்கமறுத்த நகரசபைத் தவிசாளர், எமது பிரதிநிதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தம் காரணமாக அடுத்த சபை அமர்வில் அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

எனினும் புதன்கிழமை(13) நகரசபை அமர்வு இடம்பெறவுள்ள நிலையில், இவ்வமர்வு தொடர்பாக எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் இப்பிரேரணை சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

நாளை மறுதினம் 15.05.2015ம் திகதியுடன் உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் காத்தான்குடி நகரசபையின் இறுதி அமர்வாகக்கூட இன்றைய கூட்டம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய சபை அமர்விலும் இது தொடர்பான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாதவிடத்து இதன்பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் நகர சபைக்கூடாக எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாமல் போகலாம்.

இதனால், காத்தான்குடி நகரசபை முன்பாக ஏற்பாடு செய்துள்ள 'இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் காத்தான்குடி நூதனசாலையை மாற்றியமைக்கக் கோரும்' 'மக்கள் அழுத்தப் போராட்டத்தில்' அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் அழைக்கிறோம்.' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .