2025 மே 17, சனிக்கிழமை

கலாசார பாரம்பரியங்களை மீளமைப்பதன் ஊடாக சௌபாக்கியத்தை ஏற்படுத்த முடியும்

Sudharshini   / 2015 மே 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

சிறந்த கலை கலாசாரப் பாரம்பரியங்களை மீண்டும் மீளமைப்பதினூடாக இனங்களுக்கிடையில் சகவாழ்வையும் இன சௌபாக்கியத்தையும் தோற்றுவிக்கலாம் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் கூறியதாவது,

இப்பொழுது நாட்டில் இன முரண்பாட்டுடன்கூடிய மனோநிலை, வன்முறை கலந்த நடவடிக்கைகள், சமூகச் சீரழிவுகள் பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இவற்றையெல்லாம் மீளமைப்பதாகவிருந்தால் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த எமது கலை, கலாசாரப் பண்பாடுகள் சார்ந்த உயர் விழுமியங்களும் சிறப்பம்சங்களும் உயிரூட்டப்பட வேண்டும்.

இதற்கான மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இளம் சமுதாயத்தை வழி நடாத்த வேண்டிய பெரிய பொறுப்பு சமூக அமைப்புகள் அனைத்தையும் சார்ந்துள்ளது.

கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், கலா மன்றங்கள் என்ற சிறிய வட்டத்தினுள் கலை, கலாசார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இதனால் அனைவரும் அவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாதவாறு பல்வேறுபட்ட அழுத்தங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாக நேர்ந்துள்ளன. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் இளம் பராயத்தினரும் ஏனையோரும் சிக்கித் தவிப்பதை உணர முடிகிறது.

இந்த அழுத்தங்களைக் களைந்து, இலகுப்படுத்தி கலையம்சங்கள், பாரம்பரிய விழுமியங்கள் என்பனவற்றை சமுதாயத்தின் சகல தரப்பினருக்கும் கிடைக்க கூடியதான தொழில் நுட்பங்களை ஆராய்ந்து அவற்றை வியாபிக்கச் செய்ய வேண்டும்.

அத்தோடு அவற்றை இலகுப்படுத்தி   அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதில் மூத்த கலைஞர்கள் ஆர்வம் காட்டவேண்டும். அத்தகைய உயர் விழுமியங்களும் சிறப்பம்சங்களும் நிறைந்த கலாசாரப் பாரம்பரியங்களை எதிர் கால சந்ததிக்கும் கையளிக்க வேண்டும் ' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .