2025 மே 16, வெள்ளிக்கிழமை

குப்பைகளை வீதிகளில் வீசவேண்டாம்: சிப்லி

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை பிரிவில் பொதுமக்கள் குப்பைகளை வீதிகளில் வீசவேண்டாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் காத்தான்குடி பொதுக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, காத்தான்குடி நகரசபையினூடாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை ஆற்றங்கரையோரத்தில் கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு இதற்கான ஒரு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதற்கு ஒரு நிரந்தர தீர்வொன்றினை பெற்று தருவதாகவும் தற்போது அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இந்தக் கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதி தரப்படும் எனவும் இந்த நிலையத்தின் நிர்;மாண வேலைகள் வருகின்ற 9ஆம் மாதமளவில் பூர்த்தியடைய இருப்பதால் தயவுசெய்து பொதுமக்கள் இவ்விடயத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில் தற்காலிகமாக ஒன்பதாம் மாதம் வரை குறிப்பிட்ட ஆற்றங்கரை ஓரத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதித்திருந்த போதிலும் நீதிமன்றம் ஆற்றங்கரையில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்திருப்பதால் பாரிய சிக்கல் தோன்றியுள்ளது.

என்றாலும் நகரசபையினால் பராமரிக்கப்படுகின்ற கூட்டுப்பசளை தயாரிப்புக்கு உக்கக்கூடிய கழிவுகள் பாவிக்க முடியும் என்பதால் இவைகளை வேறாக தரம் பிரித்து கழிவுகளை சேகரிக்கும் நகரசபை ஊழியர்களிடம் வழங்குங்கள்.

இதற்கிணங்க சமையலறைக் கழிவுகள் மற்றும் உக்கக்கூடிய சேதனக் கழிவுகளை வேறாக பிரித்து நகரசபை கழிவு சேகரிப்பு வாகனங்களுக்கு கொடுக்குமாறும் கடதாசி, கண்ணாடி, பிளாஸ்டிக், மரக்கட்டை, பொலித்தீன் பைகள், இவை போன்ற திண்மக்கழிவுகளை வேறாக பிரித்து வீடுகளில் வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான திண்மக்கழிவுகளுக்க தற்காலிகமாக ஒன்பதாம் மாதம் வரை ஓர் தீர்வினை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதனால், பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு வேண்டுகிறேன்.

தயவு செய்து வீதிகளில் குப்பைகளை வீசுவதனூடாக எல்லோரும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சுகாதார சீர்கேடுகளில் இருந்து நம்மை நாம் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .