2026 மே 06, புதன்கிழமை

5 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு : ஐவர் கைது

Kanagaraj   / 2013 மே 07 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தேவ அச்சுதன்

ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக  மீட்கப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிசுவாமிமலை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே அவரது சடலம் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில்  மூவர் 20 வயதுக்கும் குறைந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

காணி துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தோர் அழுகிய நிலையில் சடலம் புதைக்கப்பட்டுள்ளதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் சடலம் அவரது மனைவியினால் அவரது ஆடையினைக்கொண்டு இனங்காட்டுப்பட்டது. கச்சக்கொடிசுவாமிமலையை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான அருளானந்தம் பரமானந்தம்(45வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 21 ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில் மனைவியினால் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பணப்பிரச்சினையொன்று தொடர்பில் ஆறு பேர் இவர் மீது கடந்த 12ஆம் திகதி முறைப்பாடுசெய்திருந்ததாகவும் அது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் அந்த பிரச்சினையை தீர்த்துவைத்துமுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபர் மதுபோதையில் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த ஐந்துபேரும் இவரை கொலைசெய்து புதைத்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர் மொன்ரோக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.எஸ்.கருணாதிஸ்ஸ தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்கள் ஐந்து பேரும் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .